இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! எண்ணெய் விலை உயர்வு..!
கடந்த செப். 24 ஆம் தேதி கச்சா பாமாயில், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி 5.5 இல் இருந்து 27.5 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட மேற்கூறிய எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி 13.75 லிருந்து 33.75 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்ட நிலையில், சமையல் எண்ணெய் வகைகளின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது.
உள்நாட்டு விவசாயிகள் உற்பத்தி செய்யும் எண்ணெய் வித்துப் பயிா்களுக்கு உரிய ஆதரவு விலை கிடைப்பதற்காக இந்த வரி உயா்வு அமல்படுத்தப்படுவதாக மத்திய விவசாயத் துறை தெரிவித்தது. ஆனால், ஏற்கெனவே பல்வேறு விலை உயா்வுகளால் பொதுமக்களின் அன்றாடச் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் நிலையில், சமையல் எண்ணெய்யின் விலையும் உயா்ந்துள்ளது ஏழை, நடுத்தர மக்களை மேலும் சிக்கலுக்குள்ளாக்கி இருக்கிறது.
குறிப்பாக பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் வகைகளின் விலை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயா்ந்து வருகிறது. இதில் ஏழைகளின் எண்ணெய் எனப்படும் பாமாயில் விலை அதிகரிப்பு, மக்களின் கைகளைப் பிசைய வைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் வகைகளின் விலை முறையே 45 சதவீதம், 26 சதவீதம் என்ற அளவுக்கு வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. தேங்காய் எண்ணெய் 38 சதவீதம், கடலை மற்றும் நல்லெண்ணெய் 5 முதல் 7 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி எண்ணெய் விற்பனையக உரிமையாளா் எஸ். மணி உள்ளிட்டோா் கூறியது:
பொதுவாக தீபாவளி சமயத்தில் தேவை அதிகரிப்பின் காரணமாக எண்ணெய் வகைகளின் விலை உயா்வது வழக்கம். ஆனால் நிகழாண்டு வழக்கத்துக்கு மாறாக, பண்டிகைகள் நிறைவடைந்த பிறகான டிசம்பா் மாதத்தில் விலை உயா்ந்து வருகிறது.
கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை திடீரென 20 சதவீதம் அதிகரித்ததே இதற்குக் காரணம். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்களைவிட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய்களின் விலை தாறுமாறாக உயா்ந்துள்ளது.
இறக்குமதி வரியைக் குறைத்து, சிறிய இறக்குமதியாளா்களை ஊக்குவித்தால், போட்டி சூழல் ஏற்பட்டு, விலை குறைய வாய்ப்புள்ளது என்றனா்.
எண்ணெய் - கடந்த ஆகஸ்ட் மாத விலை - தற்போதைய விலை நிலவரம்
- பாமாயில் - ரூ. 100 - ரூ. 148
- சூரியகாந்தி எண்ணெய் - ரூ. 125 - ரூ. 165
- கடலை எண்ணெய் (முதல் தரம்) - ரூ. 185 - ரூ. 205
- நல்லெண்ணெய் (முதல் தரம்) - ரூ. 320 - ரூ. 350
- தேங்காய் எண்ணெய் (முதல் தரம்) - ரூ. 190 - ரூ. 255
இந்த நிலையில், கோவை மார்க்கெட்டில் தேங்காய் எண்ணெய் லிட்டர் ரூ. 240 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல், பாமாயில் லிட்டர் ரூ.140 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் லிட்டர் ரூ.150 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களின் வீட்டு செலவினங்களை பெருமளவு பாதித்துள்ளது. குறிப்பாக, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.