இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! காஞ்சி பட்டு சேலைகள் விலை திடீர் உயர்வு..!
காஞ்சிபுரம் பட்டு சேலைகள் உலக புகழ் பெற்றவை. தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் இணைத்து உற்பத்தி செய்யப்பட்ட ஜரிகையை பயன்படுத்தி, பட்டு சேலைகள் நெய்யப்படுவதால், 25 ஆண்டுகளுக்கு மேலாகவும், காஞ்சிபுரம் பட்டு சேலைகள் தரமாக உள்ளன.
இதன் காரணமாக, தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா, வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் காஞ்சிபுரம் வந்து பட்டு சேலை வாங்கி செல்கின்றனர். கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் கடைகள் மூலமாக, ஆண்டுக்கு சராசரியாக 300 கோடி ரூபாய்க்கு பட்டு சேலை வியாபாரம் காஞ்சிபுரத்தில் நடக்கிறது.
ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலை குறைந்தபட்சம் 10,000 ரூபாய்க்கும், அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. ஜரிகை உற்பத்தியில், தங்கமும், வெள்ளியும் முக்கிய மூலப்பொருட்களாக உள்ளன.
காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தமிழ்நாடு ஜரிகை ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஜரிகையில், 0.5 சதவீதம் தங்கமும், 40 சதவீதம் வெள்ளியும், 35.5 சதவீதம் காப்பரும், 24.0 சதவீதம் பட்டு இழையும் உள்ளது.
அண்மையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடுவென ஏறியதால் பட்டு சேலை விலையும் 30 சதவீதம் ஏறியுள்ளது. ஜரிகை விலையேற்றம் காரணமாக, பட்டு சேலை விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் விற்பனை பாதிக்கப்பட்டு நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க முடியாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் காரணமாக வியாபாரம் பாதித்த நிலையில் விலையேற்றத்தால் சேலைகள் வாங்க வாடிக்கையாளர்கள் தயங்குவதால் கோடிக்கணக்கான சேலைகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கூலி பிரச்னை, நெசவாளர்கள் பற்றாக்குறை, விற்பனை மந்தம் என பல்வேறு பிரச்னைகள் நடுவே, தங்கம் மற்றும் வெள்ளி விலையேற்றம் காரணமாக, ஜரிகை விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது உற்பத்தியாளர்களை கவலை அடைய செய்துள்ளது.