இல்லத்தரசிகள் ஷாக்..! தேங்காய் எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு...!
சென்னை நகரம் மற்றும் வெளிப்பகுதியில் ஒரு கிலோ தேங்காய் ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஒரு கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு தேங்காய் ரூ.45 முதல் ரூ.55 வரை விற்கப்படுகிறது. இதன் காரணமாக தேங்காய் எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் தேங்காய் விளைச்சல் குறைந்ததே இந்த கடுமையான விலை ஏற்றத்துக்கு காரணமாகி உள்ளது. இதனிடையே, தென்னை மரத்தில் நோய் தாக்குதல் மற்றும் பல்வேறு காரணங்களால் தென்னை விவசாயம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாகவே தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை கடுமையாக உயர காரணம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது.தற்போது, கோயம்பேட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ரூ.450 முதல் ரூ.480 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ரூ.560 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில மாவட்டங்களில் அதிக மழை பெய்ததன் காரணமாகவும், வெளியூர்களுக்கு அதிக அளவிலான தேங்காய்கள் ஏற்றுமதி செய்வதாலும் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் தேங்காய் விளைச்சலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, வேலூர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தென்னை மர தோப்புகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக பல்வேறு காரணங்களால் தென்னை விவசாயம் பாதிக்க்ப்பட்டுள்ளதால், தேங்காய் விலை மற்றும் தேங்காய் எண்ணெய் விலை தற்போது இல்லாத அளவுக்கு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதனால், இல்லத்தரசிகள், உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட பல தரப்பட்ட மக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். எனவே, தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.