காங்., எம்.பி., - எம்.எல்.ஏ., வீடுகளில் ரெய்டு..!

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. கர்நாடக அரசின் பழங்குடியினர் நலத்துறைக்கு உட்பட்டது, வால்மீகி மேம்பாட்டு ஆணையம்.
பெங்களூரு வசந்த் நகரில் உள்ள ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இருந்த, ஷிவமொக்காவை சேர்ந்த சந்திரசேகர், 55, கடந்த ஆண்டு மே 26ல், தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்து உள்ளது.
'இது பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கும்படி, ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் பத்மநாபா, கணக்காளர் பரசுராம் எனக்கு தொந்தரவு கொடுப்பதால், மனம் உடைந்து தற்கொலை செய்கிறேன்' என தெரிவித்திருந்தார்.
'சந்திரசேகர் தற்கொலைக்கு பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா தான் காரணம்' என்று, பா.ஜ., குற்றஞ்சாட்டியது.
இதனால், நாகேந்திரா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது பற்றி தகவல் கிடைத்ததால், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
அமலாக்கத் துறையினரால் நாகேந்திரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, ஜாமினில் உள்ளார். இந்த வழக்கு குறித்து மாநில அரசு, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையில், '189 கோடி ரூபாய் முறைகேடு நடக்கவில்லை. 89 கோடி ரூபாய்தான் முறைகேடு நடந்துள்ளது. இதில், 76 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது' என்று, சட்டசபையில் முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 'நாகேந்திரா மீது எந்த தவறும் இல்லை' என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 'இந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்டவர் நாகேந்திரா. கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பல்லாரி தொகுதி காங்., வேட்பாளர் துக்காராம் வெற்றிக்காக வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு செய்த பணத்தில் 21 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.
'வாக்காளர்களுக்கு வழங்க மதுபானங்கள் வாங்கப்பட்டன. நாகேந்திரா சொகுசு காரும் வாங்கினார்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நாகேந்திராவின் உதவியாளர் கோவர்தன் வீட்டில் நடத்திய சோதனையில், ஒரு டைரி சிக்கியது. அதில், வால்மீகி மேம்பாட்டு ஆணைய பணம் யார் யாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன்படி, முறைகேடு செய்த 21 கோடி ரூபாயில், பல்லாரி ரூரல் சட்ட சபை தொகுதியில் 235 ஓட்டுச்சாவடிகளுக்கு 5.22 கோடி ரூபாய்; பல்லாரி நகரில் உள்ள 150 ஓட்டுச்சாவடிகளுக்கு 3.60 கோடி; கம்பளி தொகுதியில் 180 ஓட்டுச்சாவடிகளுக்கு 3.20 கோடி; கூட்லகி தொகுதியில் உள்ள 160 ஓட்டுச்சாவடிகளுக்கு 3 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
வங்கிக்கணக்கு
இந்நிலையில், நேற்று காலை 6:30 மணிக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பல்லாரி டவுன் - பரத் ரெட்டி, கம்பளி - கணேஷ், கூட்லகி - சீனிவாஸ் ஆகியோரது வீடுகள், அலுவலகங்கள், பல்லாரி காங்., - எம்.பி., துக்காராமின் பெங்களூரு ஜெயநகரில் உள்ள வீடு, சண்டூரில் உள்ள வீடு...
துக்காராம் மனைவியும், சண்டூர் காங்., - எம்.எல்.ஏ.,வுமான அன்னபூர்ணாவின் அலுவலகம், பெங்களூரு கொடிகேஹள்ளியில் உள்ள நாகேந்திராவின் பிளாட், விதான் சவுதா அருகே உள்ள எம்.எல்.ஏ.,க்கள் பவனில், நாகேந்திராவுக்காக ஒதுக்கப்பட்ட அறை உட்பட பல்வேறு இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் 60 பேர், 10 குழுக்களாக பிரிந்து அதிரடி சோதனை நடத்தினர்.
மத்திய தொழில் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அனைத்து இடங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. இதில், சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், அதை சரிபார்த்தனர்.
எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் வங்கிக் கணக்கு விபரங்களும் சரிபார்க்கப்பட்டன.
துக்காராம், அன்னபூர்ணா, பரத் ரெட்டி, கணேஷ் ஆகியோரின் மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 'வாட்ஸாப்' வாயிலாக யார், யாரிடம் பேசினர் என்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் மொபைல் போன்களில் இருந்து அழித்த தகவல்களை மீட்கவும் நடவடிக்கை எடுத்து உள்ளனர். இந்த சோதனையின் தொடர்ச்சியாக, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.