ஹோட்டலில் ஊறுகாய் கொடுக்காததால் 35000 ரூபாய் நஷ்ட ஈடு பெற்ற வாடிக்கையாளர்..!
விழுப்புரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் தனது உறவினரின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்குவதற்காக விழுப்புரத்தில் உள்ள பாலமுருகன் ஹோட்டலில் 25 பார்சல் சாப்பாடு வாங்கியுள்ளார். அப்போது ஒரு சாப்பாட்டிற்கு 80 ரூபாய் வீதம் 25 பார்சல் சாப்பாட்டிற்கு 2000 ரூபாயை ஆரோக்கியசாமி வழங்கியுள்ளார்.
உணவு பொட்டலங்களை முதியோருக்கு வழங்கியபோது, அதில் ஊறுகாய் இல்லை. ஹோட்டலில் கேட்டபோது, அந்த உணவகத்தின் நிர்வாக தரப்பில் உரிய பதில் அளிக்காமல் அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து, ஊறுகாய்க்கான ரூபாயை திரும்பக் கேட்டுள்ளார் ஆரோக்கியசாமி. ஆனால், ஹோட்டல் உரிமையாளர் தர மறுத்துவிட்டார்.
இதனால் தான் வாங்கிய 25 சாப்பாட்டிற்கு ஊறுகாய் வழங்காத உணவகத்தின் மீது ஆரோக்கியசாமி, விழுப்புரத்தில் உள்ள நுகர்வோர் குறைத்தீர்வு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கினை விசாரித்த விழுப்புரம் நுகர்வோர் குறைத்தீர்வு ஆணையம், சாப்பாட்டிற்கு ஊறுகாய் வழங்காமல் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக பாலமுருகன் ஹோட்டல் நிர்வாகத்திற்கு ரூ.35 ஆயிரம் அபராதமும், ஊறுகாய்க்கு உரிய தொகையான ரூ.25ம் சேர்த்து 35 ஆயிரத்து 25 ரூபாயை அபராதமாக விதித்து தீர்ப்பு வழங்கியது.
ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக, 30,000, வழக்கு செலவிற்கு 5,000 ரூபாய், ஊறுகாய் பாக்கெட்டுகளுக்குரிய 25 ரூபாய் எல்லாவற்றையும், 45 நாட்களில் வழங்க ஹோட்டல் உரிமையாளருக்கு உத்தரவிட்டனர்.