தமிழகத்தில் அரங்கேறிய கொடூரம்..! திருவாரூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடூரம்..!
அதன்படி இன்று (ஜூலை 14) காலை உணவு சமைப்பதற்காக சமையல் ஊழியர்கள் வந்தபோது சமையலறையில் இருந்த பொருட்கள் உடைத்து நொறுக்கப்பட்டிருந்தன. மேலும், மளிகை பொருட்களும் சிதறி கிடந்தன. இதனால், அச்சமடைந்த சமையலர்கள் பள்ளி வளாகத்தை சுற்றி வந்து பார்த்தபோது அங்கு மாணவர்கள் பயன்படுத்தி வந்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி உடைக்கப்பட்டிருந்தது.
மேலும் அந்த தொட்டிக்குள் மலம் கொட்டப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதேப்போல் பள்ளி வளாகத்தில் இருந்த வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. தென்னை மரங்களில் இருந்த தேங்காய்கள் பறிக்கப்பட்டுள்ளன. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் பள்ளி வளாகத்தில் சிக்கன் சமைத்து சாப்பிட்டு விட்டு அங்கேயே போட்டு விட்டு சென்று இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஊழியர்கள் உடனடியாக பள்ளி தலைமையாசிரியருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக அங்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், திருவாரூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் மலம் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டி மற்றும் சேதப்படுத்தப்பட்ட சமையல் பொருட்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் அறிந்த கிராம மக்கள், பெற்றோர்கள் பள்ளி முன்பாக திரண்டனர். இதன் பின்னர் குடிநீரில் மலம் கலந்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக திருவாரூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த 3 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பள்ளியில் அனைத்து சமூகத்தை சேர்ந்த மாணவர்களும் படித்து வருவதால் சாதிய பிரச்சனை எதுவும் இல்லை என்பதும், குடிபோதை ஆசாமிகள் இதை செய்துள்ளார்கள் என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் கூறுகையில், ''பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் கண்டிக்கத்தக்கது. இச்செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உரிய விசாரணை நடத்தப்படும். தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருவாரூர் அருகே காரியாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.