சேலத்தை உலுக்கிய கொடூர கொலை..! விஷ ஊசி போட்டு காதலி கொலை.. காதலனுக்கு உதவிய 2வது காதலி..!
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பெண்கள் விடுதி உள்ளது. இங்கு திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த லோகநாயகி என்ற இளம்பெண் தங்கியிருந்தார். அவர் அருகே உள்ள நீட் பயிற்சி மையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 4 நாட்களாக லோகநாயகி திடீரென்று மாயமானார். அவர் தங்கும் விடுதிக்கு வரவில்லை.
இதனால் தங்கும் விடுதியின் வார்டன் சார்பில் சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.
அப்போது லோகநாயகியின் செல்போன் சேலம் ஏற்காடு மலைப்பாதையில் வைத்து ‛ஸ்விட்ச்ஆப்' செய்யப்பட்டது தெரியவந்தது. கடைசியாக அவர் யாருடன் அதிக நேரம் பேசியிருக்கிறார்? என்பது பற்றி ஆராயப்பட்டது. அப்போது திருச்சியை சேர்ந்த அப்துல் ஹபீஸ் (வயது 22) என்பவருடன் லோகநாயகி கடைசியாக பேசியிருப்பது தெரியவந்தது. அவர் யார் என்றால் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது.
அப்துல் ஹபீசை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் திடுக்கிட வைக்கும் தகவல்களை கூறினார். அதாவது அப்துல் ஹபீசுக்கும் லோகநாயகிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறி உள்ளது. அப்துல் ஹபீஸ் பெரம்பலூரில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். அப்துல் ஹபீசை விட லோகநாயகிக்கு வயது என்பது அதிகம். அதேபோல் அப்துல் ஹபீசுக்கு இன்னொரு பெண்ணுடன் காதல் இருந்துள்ளது.
இதனால் லோகநாயகியை கழற்றிவிட முடிவு செய்துள்ளார். ஆனால் லோகநாயகி திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அப்துல் ஹபீஸ் லோகநாயகிக்கு விஷ ஊசி செலுத்தி கொன்றுள்ளார். இதுபற்றி அப்துல் ஹபீஸ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதாவது அப்துல் ஹபீசுக்கு மொத்தம் 2 காதலிகள் இருந்துள்ளனர். இதில் லோகநாயகியும் ஒரு காதலி ஆவார். லோகநாயகிக்கு, அப்துல் ஹபீசை விட வயது என்பது அதிகம். இதனால் அவரை திருமணம் செய்ய அப்துல் ஹபீஸ் விரும்பவில்லை. இதற்கிடையே லோகநாயகி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அப்துல் ஹபீசிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் லோகநாயகியை தீர்த்து கட்ட அப்துல் ஹபீஸ் முடிவு செய்தார். இதற்கு அவர் தனது இன்னொரு காதலி மற்றும் தோழியிடம் உதவி கேட்டுள்ளார். இதற்கு அவர்கள் உதவி செய்வதாக கூறியுள்ளனர். இதையடுத்து அப்துல் ஹபீஸ் வாடகை காரை எடுத்து கொண்டு மார்ச் 1ம் தேதி ஐடி ஊழியரான காவியா சுல்தானா (22) மற்றும் தோழி மோனிஷாவுடன் சேலம் சென்றுள்ளார். வாடகை காரை அப்துல் ஹபீசே ஓட்டியுள்ளார். அங்கு அவர்கள் 3 பேரும் லோகநாயகியை காரில் அழைத்து ஏற்காடு மலைப்பாதைக்கு சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் 3 பேரும் லோகநாயகிக்கு மயக்கமருந்து கலந்த ஜூஸை வழங்கி உள்ளனர். இதை குடித்து அவர் மயங்கி உள்ளார். இதை சாதகமாக பயன்படுத்தி அவருக்கு விஷஊசி போட்டு கொன்றுள்ளனர். அதன்பிறகு உடலை ஏற்காடு மலைப்பாதையில் உள்ள பாலத்தில் இருந்து தூக்கி வீசிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இந்த வழக்கில் அப்துல் ஹபீஸ், ஐடி ஊழியரான காவியா சுல்தானா, மோனிஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் காவியா சுல்தானாவும், அப்துல் ஹபீசும் காதலித்துள்ளதாக கூறப்படுகிறது. இவருக்காக தான் அப்துல் ஹபீஸ் லோகநாயகியை தீர்த்து கட்டி உள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் அப்துல் ஹபீஸ் கூறிய இடத்துக்கு சென்ற போலீசார் லோகநாயகியின் உடலை மீட்டுள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய வயதை விட அதிக வயது கொண்ட லோகநாயகியை காதலித்து திருமணத்துக்கு வற்புறுத்தியதால் அவரை தனது 2 வது காதலி மற்றும் தோழியுடன் சேர்ந்து விஷ ஊசி செலுத்தி இளைஞர் ஒருவர் கொன்ற சம்பவம் சேலத்தை அதிர வைத்துள்ளது.