இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..! எங்கு தெரியுமா ?
வடமாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம், அடுத்த 48 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை, 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தது. தொடர்ந்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்நிலையில், இமாசல பிரதேசத்தில் நேற்று காலை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், லஹால் மற்றும் ஸ்பிடி நகரில் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. கிரம்பு மற்றும் சோட்டா தர்ரா ஆகிய கிராமங்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகி இருந்தன. கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து தடைப்பட்டது.
ஸ்பிடியில் இருந்து மணாலி நோக்கி சென்ற கல்லூரி மாணவர்கள் 30 பேர் நடுவழியில் சிக்கி கொண்டனர். அவர்கள் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர். இமாசல பிரதேசத்தில் மாண்டி மாவட்டத்தில் ரியாஸ் ஆற்றில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, மாண்டியில் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை மாண்டி நகர துணை காவல் ஆணையாளர் அரிந்தம் சவுத்ரி தெரிவித்து உள்ளார். இமாசல பிரதேசத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இயல்பு நிலைமை திரும்பியதும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.