விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(டிச.4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில் விழுப்புரம் அதிகனமழையை எதிர்கொண்டது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. சாலையில் தேங்கிய மழை நீரால் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழையினால் பாதிக்கப்படுபவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக மாவட்டம் முழுவதும் 850 தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டது. மேலும், மரக்காணம், வானூர் ஆகிய தாலுகாக்களில் 12 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் தயார்ப்படுத்தப்பட்டு, அம்மையங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் திங்கள்கிழமை (டிச.4) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.