இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக மட்டும் 5786 ஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. 1298 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இதில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஆயிரம் ஜல்லிக்கட்டு காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரடியாக ஐயாயிரத்திற்கு மேற்பட்டோரும் தொலைக்காட்சிகளில் லட்சக்கணக்கானோரும் பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கும் நிலையில் மதுரையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் தனியார் மதுபான பார்கள் இயங்காது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் பகுதியில் எதிர்வரும் 16.01.2025 அன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு அலங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள் (FL-1) மற்றும் மனமகிழ் மன்றங்களை (FL-2) 16.01.2025 ஒரு நாள் மட்டும் மூடப்பட்டு இருக்கும். மேற்படி தினத்தில் மதுபான சில்லறை விற்பனை எதுவும் நடைபெறாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அரசு மதுபானக்கடை எண் - 5416 க.எண்.3/321, பிளாட் எண்.29, எம்.பி.மகால், கோவில் பாப்பாகுடி ரோடு, சிக்கந்தர் சாவடி, மதுரை , 5459 க.எண்.4/278, பாலமேடு மெயின் ரோடு, பொதும்பு, சிக்கந்தர் சாவடி, மதுரை. , ரெட் மௌண்ட் ஸ்போர்ஸ் அண்டு மனமகிழ்மன்றம் 3/377, அலங்காநல்லூர் மெயின் ரோடு, சிக்கந்தர் சாவடி, மதுரை., பிரின்ஸ் ஸ்போர்ஸ் அண்டு மனமகிழ்மன்றம், எண். 53/1, விசுவாசகர் நகர், பாசிங்கா புரம், பொதும்பு, மதுரை ஆகிய கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.