1. Home
  2. தமிழ்நாடு

இன்று நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

1

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வரும் ஆகஸ்ட் 8 வரை சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஆகஸ்ட் 5 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஆகஸ்ட் 5-ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

மேலும், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஆகஸ்ட் 5-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like