அடிச்சது ஜாக்பாட்...!! 8 வைரங்களைக் கண்டெடுத்த பெண் தொழிலாளி!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பன்னா மாவட்டம், கிருஷ்ணா கல்யாண்பூர் கிராமத்தில் உள்ளது 'பட்டி பஜாரியா'. மத்திய பிரதேசத்தையும் கடந்து, அண்டை மாநிலங்கள் வரை இந்த பெயர் பிரசித்தி பெற்றது. அப்படி என்னதான் இந்த இடத்தில் உள்ளது என்ற ஆராய்ந்தால், இந்தியாவில் முறைப்படுத்தப்பட்ட வைரச்சுரங்கம் அமைந்துள்ள ஒரே இடம் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.
நம்மூரில் மக்கள் காலையில் எழுந்து வயல்வெளிகளுக்கு விவசாய பணிகளுக்கு செல்வதை போன்று இந்த பகுதியை சேர்ந்த மக்கள், தங்களின் தினசரி பணியாக வைரங்களை தேடி நெடும் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த மக்கள் பல தசாப்தங்களாக வைரங்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ன்னா வைரங்கள் இந்தியாவின் பிற பகுதிகளில் காணப்படுவதை ஒப்பிடும்போது குறைந்த கடினத்தன்மையைக் கொண்டவையாகும். வைரம் தோண்டி எடுக்கும் பணிகளும் மற்ற இடங்களை விட இங்கு எளிமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் தங்கள் வாழ்க்கையை மாற்ற, வைரங்களை தேடி பொதுமக்கள் படையெடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஒரே வாரத்தில் பெண் ஒருவர் தனது விவசாய நிலத்திலிருந்து 8 வைரக் கற்களை கண்டெடுத்து லட்சாதிபதியாகியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரச்சனா கோல்டர். இவர் தனது கணவர் ராதா ராமன் கோல்டருடன் பன்னாவிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்காடி குர்தி என்ற பகுதியில் ஒரு விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து அங்கு தங்கி வருகிறார்.
இவர் அந்த நிலத்தில் ஒரு சுரங்கத்தை அமைத்து விலையுயர்ந்த கற்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்படி தொடர்ந்து தேடிவந்த ரச்சனாவிற்கு அதிர்ஷ்டவசமாக கடந்த வாரத்தில் திடீரென ஒரு பிரகாசமான கல் தென்பட்டது. அதை எடுத்து பார்த்தபோது அது வைரக்கல் என்பதை தெரிந்துகொண்ட அவருக்கு நம்பிக்கை துளிர்விடவே, அதே இடத்தில் தொடர்ந்து தேட ஆரம்பித்துள்ளார்.
தனது விடாமுயற்சியின் பலனாக ஒரே வாரத்தில் ரச்சனாவிற்கு 8 வைரக்கற்கள் கிடைத்திருக்கின்றன. இந்த கற்களை அவர் தனது வீட்டில் வைத்திருக்காமல் உடனடியாக பன்னாவிலுள்ள வைர அலுவலகத்திற்குச் சென்று, அவற்றை எடைபோட்டு பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் ரச்சனா கூறுகையில், “குத்தகைக்கு எடுத்த விவசாய நிலத்தில் நாங்கள் ஒரு சுரங்கத்தை அமைத்தோம்.
அந்த சுரங்கத்திலிருந்து ஒரே வாரத்தில் 8 வைர கற்களை கண்டறிந்துள்ளோம். நாங்கள் அந்த பண்ணையில் தனியாக வசித்து வருவதால் உடனடியாக அந்த கற்களை அலுவலகத்திற்கு கொண்டுவந்து டெபாசிட் செய்துவிட்டேன்” என்றார்.
இதுகுறித்து, வைர நிபுணர் அனுபம் சிங் கூறுகையில், “ரச்சனா டெபாசிட் செய்திருக்கிற கற்கள் அனைத்தும் சேர்ந்து 3.10 காரட் (சென்ட்) எடை உள்ளன. ஒவ்வொரு கற்களையும் தனிப்பட்ட முறையில் நிறுத்து பார்க்கும்போது அவை 0.14 முதல் 0.79 காரட் வரை இருக்கின்றன. அவற்றில் 6 கற்கள் பிரகாசமான தரம் கொண்டவை. 2 கற்கள் சற்று தரம் குறைந்தவை. இருப்பினும் அந்த கற்களின் சரியான மதிப்பானது இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அடுத்த ஏலத்தின்போது இந்த கற்களும் ஏலத்திற்கு வரும்” என்றார்.
.png)