இனி இந்து கோவில்களில் இந்துக்களுக்கு மட்டுமே பதவி..!
தலைமைச் செயலகத்தில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-
எந்தக் கோவிலாக இருந்தாலும் அந்த மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும். ஜெகன்மோகன் ரெட்டியை யாரும் திருப்பதிக்கு போக வேண்டாம் என்று சொல்லவில்லை. திருப்பதிக்கு போகாததற்கு ஜெகன்மோகன் ஏதோ ஒரு சாக்கு சொல்லுகிறார்.
ஒவ்வொரு கோவிலுக்கும், மதத்திற்கும் ஒரு சம்பிரதாயம், கலாச்சாரம் உள்ளது. அந்தக் கடவுளின் பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும். கடவுள் மற்றும் சடங்குகளைவிட யாரும் பெரியவர்கள் இல்லை.
ஏழுமலையான் கோவில் கிடைத்திருப்பது தெலுங்கு மக்களின் அதிர்ஷ்டம். இதற்கு முன்பு முதல்-மந்திரியாக நான் சென்றேன்.
.இப்போது ஏன் போகக் கூடாது என்று ஜெகன்மோகன் ரெட்டி கூறுகிறார். இதற்கு முன்பு ஜெகன்மோகன் ரெட்டி விதிகளை மீறித் திருப்பதிக்குச் சென்றார். பலர் நம்பிக்கை உறுதி கொடுத்துவிட்டு சென்றனர்.
இந்து மதத்தை மதிக்கும் திருப்பதியில் உள்ள விதிகளை ஏன் ஜெகன்மோகன் ரெட்டி பின்பற்றுவதில்லை?. லட்டுவில் கலப்படம் செய்யவில்லையெனக் கூறுகிறார். நெய்யில் கலப்படம் செய்யப்பட்டது ஆய்வக அறிக்கையில் தெளிவாக உள்ளது. இருப்பினும் முழு விசாரணை செய்வதற்காக ஐ.ஜி. தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது
.மேலும் ஆந்திர மாநிலத்தில் புதிதாக ஒரு சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இதில் எந்த வழிபாட்டு தலமாக இருந்தாலும் , மசூதியாக இருந்தாலும், தேவாலயம், கோவிலாக இருந்தாலும் அந்தந்த வழிபாட்டு தலங்களில் அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இனி பதவியில் இருக்க வேண்டும். கோவில்களில் இந்துக்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.