தமிழகத்தில் பரபரப்பு : இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கைது!
கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி கிராமத்தில் தனியாரால் பராமரிக்கப்படும் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் 40 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் வருவதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் கோயில் நிதியை முறையாக பயன்படுத்துவது இல்லை என்று குற்றம் சாட்டு எழுந்துள்ளது.
இதனால் இந்த கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று கோயிலின் நிர்வாகிகளில் ஒருவரான சுரேஷ்குமார் என்பவர் இந்து சமய அறநிலையத்துறையில் மனு ஒன்றை அளித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றமும் இது தொடர்பாக 12 வாரங்களில் நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் சுரேஷ்குமார் மனு மீது நடவடிக்கை எடுத்து கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர அந்த கோயில் நிர்வாகியான சுரேஷ்குமாரிடம் 3 லட்சம் ரூபாய் வரை இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் லஞ்சம் கேட்டுள்ளார்.
ஆனால் சுரேஷ்குமார் மூன்று லட்சம் வரை தர இயலாது என்று மறுத்துள்ளார். இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் பேரம் பேசிய நிலையில் கடைசியாக ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று உதவி ஆணையர் இந்திரா வற்புறுத்தி உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் அருகில் உள்ள பாரதியார் சாலையில் ஒன்றரை லட்சம் லஞ்ச பணத்தை சுரேஷ்குமாரிடமிருந்து உதவி ஆணையர் இந்திரா பெற்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை கைது செய்தனர்.
மேலும் இந்திரா லஞ்சம் வாங்கியது தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட உதவி ஆணையர் இந்திராவை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரியே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக கைதாகி இருப்பது இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.