1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்று அமைச்சா் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஆா்ப்பாட்டம் - இந்து முன்னணி..!

1

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு அனைவருக்கும் ஆனதா? இல்லை இந்து விரோத அரசா? என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. தொடர்ந்து, இந்துக்களையும், இந்து மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்துவது, புண்படுத்துவது திமுகவின் வாடிக்கையாகி வருகிறது.

திமுக அரசு தோல்விகளை மறைக்க, மக்கள் பிரச்சினைகளைத் திசை திருப்ப, தனது இளவரசருக்கு மகுடம் சூட்ட இந்துமத எதிர்ப்பு என்கின்ற ஆயுதத்தையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு என்கின்ற கூட்டத்தில் திமுகவின் இளவரசர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மலேரியா, டெங்கு, கொரோனா போன்றவற்றுடன் இந்து மத நம்பிக்கைகளை ஒப்பிட்டு அவற்றை ஒழிக்க வேண்டும் என்று பேசி உள்ளார். சமஸ்கிருதத்தையும் எதிர்த்துள்ளார் உதயநிதி.

ஒரு விஷயத்தை அறியாமல் போனது கேலிக்கூத்தான விஷயம். அவருடைய உதயநிதி என்ற பெயரே வடமொழிச் சொல்தான். எந்த விஷயத்தையும் தங்களிடமிருந்தே திமுக ஆரம்பிப்பதுதான் நல்லது. அதன்படி, முதலில் உதயநிதி தன்னுடைய குடும்பத்தில் சனாதனத்தை ஒழித்து விட்டு வரட்டும். தன் பெயரையும் உதயநிதி மாற்றிக் கொள்வாரா?

தன்னைப் பகிரங்கமாக ஒரு கிறிஸ்தவன் என்றும், தன் மனைவி கிறிஸ்தவர் என்றும் சொல்லிய உதயநிதி ஸ்டாலினுக்கு இந்து மதத்தை விமர்சிக்க என்ன தகுதி இருக்கின்றது?

நடைபெற்ற மாநாட்டில் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் இந்துக்கள் காலம் காலமாகக் கடைப்பிடித்து வரும் சடங்குகள் சம்பிரதாயங்களைக் கொச்சைப்படுத்துவதுடன், அவற்றை ஒழிக்க வேண்டும் என்பதாக உள்ளது.

இந்துக்கள் செய்யும் சடங்குகளை எல்லாம் ஒழித்து விட்டுப் புதிதாகச் சடங்குகள் செய்யும் வகையில் வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நேரடியாக இந்து மதச் சடங்குகளை அழித்து இந்து மதத்தை அழிக்கும் முறையே ஆகும்.

மேலும், உதயநிதி ஸ்டாலினும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் தமிழக அரசு மத வழிபாடு சம்பந்தமான எந்த ஒரு நிர்வாகத்தையும் செய்யக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அப்படி என்றால், அந்த தீர்மானத்தின்படி அந்த மாநாட்டில் கலந்து கொண்டு அந்த தீர்மானத்தை ஆதரித்த ஏற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு இந்துக் கோயில்களை நிர்வாகிக்கும் பொறுப்பில் இருந்து மாநில அரசு வெளியேற வேண்டும் என்ற கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

அப்படி என்றால் சேகர் பாபு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீடிக்கலாமா நியாயம்தானா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தொடர்ந்து திமுக தோல்விகளைச் சந்திக்கும் பொழுதும், பிரச்சனைகளை திசை திருப்புவதற்கும், ஹிந்து மத எதிர்ப்பு, சனாதனம் போன்ற ஆயுதங்களைக் கையில் எடுத்து வருகிறது. இதை இந்துக்கள் தட்டிக் கேட்க மாட்டார்கள் சகித்துக் கொள்வார்கள் என்கின்ற அலட்சிய மனோபாவத்தைக் காட்டுகிறது.

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க, நடைமுறையில் இல்லாத ஒரு நடைமுறை இருப்பதாகப் பாவ்லா காண்பித்து அதை கையிலெடுத்து, அதை ஒரு பரபரப்பு செய்தி ஆக்க வேண்டிய அவசியம் உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன உள்ளது?

அரசியல் சட்டப்படி பதவிப்பிரமாணம் ஏற்றுள்ள அமைச்சர் ஒருவர், அனைத்துத் தரப்பு மக்களையும் சமமாகப் பாவிக்க வேண்டும். அனைவரின் நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும்.

ஆனால், உதயநிதி ஸ்டாலின் இந்து மத எதிர்ப்பை கையில் எடுத்துக் கொண்டு இந்துக்கள் மனம் புண்படும்படி நடப்பதும், பிறகு அதனைச் சமாளிக்க நான் சனாதனத்தைத் தான் எதிர்த்தேன் என்று கூறுவதும், பேசுவதும் அவர் ஏற்றுக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு எதிரானது.

தொடர்ந்து, இந்து மதத்தை எதிர்த்து விமர்சித்துக் கொச்சைப்படுத்தி இழிவு படுத்தி வருகிற திமுகவையும் உதயநிதி ஸ்டாலினையும் இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் மீது மாநில அரசாங்கம் கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆளுநர் உதயநிதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

இதனை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று 7ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும். கள்ளக்கிணறு கிராமத்தில் 4 போ் கொல்லப்பட்டதைக் கண்டித்து பல்லடத்தில் 7ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா்.உடன் மாநிலச் செயலாளா் தாமு வெங்கடேஷ், மாவட்டச் செயலாளா்கள் லோகநாதன், சா்வேஸ்வரன் மற்றும் நிா்வாகிகள் இருந்தனா்.

Trending News

Latest News

You May Like