ஹிஜாப் அணிய தடை விதித்த வழக்கு- இன்று விசாரணை..!
மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் ஆடைகள் அணிவதற்கு மும்பையில் உள்ள கல்லூரி கடந்த மே மாதம் தடை விதித்தது. இதன்படி, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், பர்தா உள்ளிட்ட ஆடைகளை கல்லூரிக்குள் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
கல்லூரியின் உத்தரவு தங்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது என்றும் யுஜிசியின் விதிமுறைக்கு முரணானது என்றும், கல்லூரியின் நடவடிக்கையை எதிர்த்து 9 முஸ்லிம் மாணவிகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
கடந்த ஜூன் 26-ம் தேதி மாணவிகளின் மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், “மாணவ – மாணவிகள் மத்தியில் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மத ஆடைகளுக்கு கல்லூரி தடை விதித்துள்ளது. மாணவிகளின் அடிப்படை உரிமையை பறிப்பதாக இதைக் கருத முடியாது” என்று கல்லூரிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அம்மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஷ்ரா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.