வருகிறது அதிவேக இணைய சேவை..! டான்பிநெட் உடன் கைகோர்க்கும் TACTV..!

தமிழகத்தில் குறிப்பிட்ட சில கேபிள் டிவி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான கேபிள் சேவையை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது.தொடர்ந்து கேபிள் மூலம் சேவை வழங்கப்பட்ட நிலையில், அது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படுகிறது. மேலும், அந்த செட்டாப் பாக்ஸ்கள் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
200க்கும் மேற்பட்ட சேனல்கள் 200 கட்டணத்தில் வழங்கப்படுகிறது. 140 ரூபாய் ஜிஎஸ்டி வரியுடன் சந்தா தொகை வசூலிக்க வேண்டும் என கூறப்பட்டாலும் சில இடங்களில் கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அப்போது பிற தனியார் நிறுவனங்களில் இருந்த ஆபரேட்டர்கள் அரசு கேபிள் சேவையில் இணைந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஹெச்டி செட்டாப் பாக்ஸ்கள் வழங்க வேண்டும் என கேபிள் டிவி ஆபரேட்டர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து உயர் தொழில்நுட்பத்துடன் அரசு கேபிள் டிவிக்கு விரைவில் எச்டி செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஹெச்டி செட்டாப் பாக்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக விநியோகஸ்தர்கள் மேலாளர்கள் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சில இடங்களில் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து இணைய சேவையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு கேபிள் டிவியும் டான்பிநெட் நிறுவனமும் இணைந்து குறைந்த விலையில் அதிவேக இணைய சேவையுடன் கூடிய ஐபி டிவியும் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அரசு கேபிள் டிவி வாரிய தலைவர் தஞ்சை ஜீவா கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு அரசின் கேபிள் டிவி வாரிய தலைவர் தஞ்சை ஜீவா தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் கேபிள் டிவி வாரிய தலைவர் தஞ்சை ஜீவா கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்," 25 லட்சம் இணைப்புகளை இலக்காக வைத்து தமிழ்நாடு முழுவதும் களப்பணியாற்றி வருகிறோம். 40 லட்சம் இணைப்புகளை அடைந்த உடன் தற்காலிக பணியாளர்களை முதலமைச்சர் , துணை முதலமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்து சென்று நிரந்தர பணியாளர்களாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசு சார்ந்த அனைத்து கட்டிடங்களிலும் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பாவதை உறுதி செய்ய வேண்டும். விரைவில் டான்பிநெட் நிறுவனத்தின் வழியாக ஸ்டேன்ட் பை சிக்னல் வழங்கப்படும். அரசு கேபிள் டிவியும் டான்பிநெட் நிறுவனமும் இணைந்து குறைந்த விலையில் அதிவேக இணைய சேவையுடன் கூடிய ஐபிடிவியும் வழங்க உள்ளது" என்றார்.