பள்ளிக்கல்வி துறைக்கு ஐகோர்ட் கிளை கேள்வி..! மாசத்துக்கு ரூ.6000 கட்டுப்படியாகுமா?
பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊதியம் நிர்ணயித்ததை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.அந்தமனுவில், "தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பிலும், ஒருங்கிணைந்த ஊதியம் நிர்ணயிப்பதிலும் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.இதனால் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு ஊதிய விவகாரம் தொடர்பாக 2010-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் அல்லாத ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் தூய்மைப் பணியாளர் ஆகியோருக்கு மாத ஊதியம் ரூ.6 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதனால், அரசு மாதிரிப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு சமமான ஊதியம் வழங்கக்கோரி கடந்த 2020-ம் ஆண்டில் மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தொகுப்பூதியத்தில் மனுதாரர் தேர்வாகி உள்ளதால் 2010-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை பொருந்தாது என உத்தரவிட்டார். அதை ரத்து செய்து எனது பணியை வரன்முறைப்படுத்தவும், உரிய ஊதியம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று(ஜூலை 25) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம் நிர்ணயம் செய்தது எப்படி?.
தற்போதைய விலைவாசியில் மக்களை பற்றி யோசிக்க மாட்டீர்களா?. குடும்பம் நடத்த ஒரு நாளைக்கு ரூ.200 போதுமா?. இது போன்ற அரசாணைகள் எப்படி பிறப்பிக்கப்படுகின்றன. இது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
.png)