போலீசின் தவறே ரோகிணி தியேட்டர் சேதத்திற்கு காரணம் - உயர்நீதிமன்ற நீதிபதி..!

சேலம், கிருஷ்ணகிரியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதிக் கோரிய வழக்கு இன்று (அக்.06) பிற்பகல் 03.00 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன், “லியோ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டுக்கே ரோகிணி திரையரங்கில் அவ்வளவு பிரச்சனையா? பார்க்கிங்கில் ஸ்கிரீன் அமைத்து டிரெய்லரை ரிலீஸ் செய்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியிலும் இதேபோன்று தான் பிரச்சனை ஆனது. சட்டம்- ஒழுங்கை போலீஸ் காரணம் காட்டியபோது, இவ்வாறு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “லியோ இசை வெளியீட்டு விழாவை படத் தயாரிப்பு நிறுவனம் தாமாகவே ரத்து செய்தது. ரோகிணி தியேட்டருக்கு வெளியே டிரெய்லரை வெளியிட எந்த அனுமதியும் கோரப்படவில்லை. ரோகிணி திரையரங்கில் நடந்த சம்பவம் தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை. புகாரின்றி நடவடிக்கை எடுத்தால் விஜய் ரசிகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக புகார் எழும்” என்று வாதிட்டார்.
இதற்கு நீதிபதி, “ரோகிணி தியேட்டர் சேதப்படுத்தப்பட்டதற்கு போலீசாரின் தவறான கையாளுதலே காரணம். ரசிகர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி அவர்களை முறையாக கையாண்டிருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.