வெற்றி தரும் சரஸ்வதி பூஜை/ஆயுத பூஜை செய்ய நல்ல நேரம் இதோ..!

இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றாக நவராத்திரி விழா விளங்குகிறது. இந்த நவராத்திரி விழாவில் துர்க்கை அம்மனை முதல் மூன்று நாட்கள்வழிபடப்படுகிறது. அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும். அதற்கடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்யப்படுகிறது. நவராத்திரி விழாவின் இறுதியில் சரஸ்வதி தேவியை பூஜை செய்து வழிபடுவதால் அந்த நாள்சரஸ்வதி பூஜை என்று அழைக்கப்படுகிறது.
கல்வியில் சிறந்து விளங்கும் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வதால் கல்வி ஞானம் பெருகும் என்பது நம்பிக்கை. அதேபோல் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய சரஸ்வதி தேவியை வணங்குவதும் உண்டு.
ஒரு மனிதனின் வாழ்வில் கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே போல அவர் செய்யும் தொழிலும் முக்கியத்துவம் பெற்றது. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பது பழமொழி. எனவே நாம் செய்யும் தொழிலையும், அதற்கான கருவிகளையும் இறைவனின் முன்பாக வைத்து வழிபடும் முறையும், இந்த நாளில் பின்பற்றப்படுகிறது. எனவே இந்த தினம் ‘ஆயுத பூஜை’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் நவராத்திரியின் நிறைவு நாள் அக்டோபர் 11ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்று காலை 07.22 வரை அஷ்டமி திதி உள்ளது. அன்று உத்திராடம் நட்சத்திரத்துடன் இணைந்து வருகிறது. உத்திராடம் நட்சத்திரம் சூரியனுக்குரிய நட்சத்திரம் ஆகும். ஜோதிட சாஸ்திரப்படி சூரியன் தான் தலைமை பதவி, அரசாங்க பதவி ஆகியவற்றை தரக் கூடியவர். அதே போல் உத்திராடம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முழு முதற்கடவுளும், ஞான வடிவமுமான விநாயகப் பெருமான். ஞான முதல்வனான விநாயகருக்குரிய நட்சத்திரம் வரும் நாளில் இந்த ஆண்டு ஞானத்தின் கடவுளான சரஸ்வதி தேவிக்குரிய பூஜை நாள் வருவது தனிச்சிறப்பாகும்.
பெரும்பாலானவர்கள் விஜயதசமி அன்று தான் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, வித்யாரம்பம் செய்து வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் தற்போது சரஸ்வதி பூனை அன்றே பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும், வித்யாரம்பமும் நடத்தப்படுகிறது. அதனால் இந்த ஆண்டு வித்யாரம்பம் மற்றும் சரஸ்வதி பூஜை செய்வதற்கான நல்ல நேரம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வித்யாரம்பம் - காலை 08.20 முதல் 10.20 வரை
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வழிபாட்டு நேரம் :
காலை 08.20 முதல் 10.20 வரை
பகல் 12 முதல் 01.30 வரை
மாலை 6 மணிக்கு பிறகு
மேலும் பூஜை அறையில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து குங்குமத்தில் பொட்டு வைத்து, அருகம்புல் ஆகியவை வைத்து வழிபட்ட பின்பு தான் கல்வி கற்பதில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும்.செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழியை கேட்டிருப்பீர்கள். அந்த தொழிலை வணங்க வேண்டிய தினம் தான் இன்று. ஆம்.பூஜையறையில் புத்தங்கள், பேனாக்கள் வைத்து பொட்டுவைத்து அலங்கரிக்கவும்.
மேலும் வீட்டு உபயோக்கருவிகளாகிய அரிவாள்மனை, சுத்தி, அரிவாள் போன்றவற்றிலும் பொட்டு வைத்து அலங்கரிக்கவும்.தொழில் செய்பவர்கள் உங்கள் தொழிலுக்குரிய இயந்திரங்களுக்கு பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும்.
நீங்க எந்த தொழில் செய்பவராக இருந்தால் அதற்கு உதவும் கருவி அல்லது பொருளை சுத்தம் செய்து சந்தனப் பொட்டு, குங்கும பொட்டு வைத்து பூ வைத்து வணங்க வேண்டும். பஸ், லாரி, ஆட்டோ ஓட்டுபவர்கள் உங்கள் வாகனத்தில் சந்தனத்தை கரைத்து வாகனம் முழுவதும் தெளித்துவிடலாம்.
பின்பு நெய்வேத்தியம் செய்வதற்காக வாழை இலையில் பொரி கடலை, அவல், வடை பாயாசம் மற்றும் பல வகையான பழங்களை வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
எங்கெல்லாம் பூஜை செய்தீர்களோ மணியடித்து நீரினால் மூன்று முறைச்சுற்றி நிவேதனம் செய்து விட்டு புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களுக்கும் நிவேதனம் செய்யவும்.பிறகு சூடம் ஏற்றி தீபாராதனை செய்து வழிபடவும். விபூதி, குங்குமம் மற்று பொரிக்கடலை ஆகியவற்றை எல்லாருக்கும் கொடுத்து பூஜையை நிறைவு செய்யவும்.
இந்த ஆண்டு விஜயதசமி விழா அக்டோபர் 12ம் தேதி சனிக்கிழமை வருகிறது. இது புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பது குறிப்பிடதக்கது. விஜயதசமி அன்று காலை 10.30 மணிக்கும் மதியம் 1 மணி வரை சாமி கும்பிட நல்ல நேரமாக உள்ளது. மாலையில் 4.30 முதல் 6 மணி வரை சாமி கும்பிடலாம்.