#BREAKING : நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் வெற்றி..!
ஜே.எம்.எம் தலைவரும், ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் மீது நில மோசடி, சுரங்க ஏல முறைகேடு உள்ளிட்ட சில வழக்குகள் இருக்கும் நிலையில், அதில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்தது.
ராஞ்சியிலுள்ள முதல்வர் இல்லத்தில் வைத்து ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜனவரி 20-ம் தேதி விசாரித்தனர். மீண்டும் ஜனவரி 29-ம் தேதி அல்லது 31-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். அவரும், ஜனவரி 31-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக ராஞ்சியிலுள்ள அமலாக்கத்துறை அதிகாரிக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.
எதிர்பார்த்ததைப்போலவே, ஜனவரி 31-ம் தேதியன்று ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. அதையடுத்து, முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். தற்போது, ஜே.எம்.எம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநில அமைச்சருமான சம்பாய் சோரன் முதல்வராகயிருக்கிறார்.ஹேமந்த் சோரனை சிறையில் அடைத்துவிட்டார்கள். இது, ஜே.எம்.எம் கட்சிக்கு மட்டுமல்லாமல், ‘இந்தியா’ கூட்டணிக்கும் ஒரு நெருக்கடிதான். இதற்கு முன்பு நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணியின் எல்லா கூட்டங்களிலும் ஹேமந்த் சோரன் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது. பாஜகவுடன் நெருங்கிய தொடர்பை வைத்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக்குவிப்பு வழக்கு இருக்கிறது, அதேபோல மகாராஷ்டிராவில் ஆட்சியிலிருக்கும் சிவசேனா-பாஜக கூட்டணியின் துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மீது பிரதமர் நரேந்திர மோடியே நேடியாக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார். இவர்களையெல்லாம் விசாரணைக்கு அழைக்காத, சம்மன் அனுப்பாத அமலாக்கத்துறை இந்தியா கூட்டணியில் இருக்கும் தலைவர்களை மட்டும் குறிவைப்பதாக எதிரக்கட்சிகள் மத்திய அரசு மீது கடும் விமர்சனத்தை வைத்து வருகின்றன.
இந்நிலையில் ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சட்டசபைக்கு வந்தார் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன். அப்போது பேசிய ஹேமந்த் சோரன், "ஜனவரி 31 இரவு, நாட்டிலேயே முதல்முறையாக ஒரு மாநில முதல்வர் கைது செய்யப்பட்டார். எனது கைது சம்பவத்தில் ஆளுநர் மாளிகைக்கு தொடர்பு உள்ளதாக நான் நினைக்கிறேன்.நான் கைது செய்யப்பட்ட ஜன.31ம் தேதி, இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாக நினைவுகூரப்படும். என் மீதான குற்றச்சாட்டை முடிந்தால் நிரூபித்துக் காண்பிக்க வேண்டும். பாஜகவுக்கு தைரியம் இருந்தால் என் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தின் ஆவணங்களை காண்பிக்கட்டும். சவால் விடுக்கிறேன். அப்படி நிரூபித்துவிட்டால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று கூறினார். மேலும் "பழங்குடியினரை ஒன்றிய அரசு ஏன் இவ்வளவு வெறுக்கிறது? என பேசினார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றிபெற்றது. முதல்வர் சம்பாய் சோரன் அரசுக்கு 47 வாக்குகள் கிடைத்தன. பெரும்பான்மைக்கு 41 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 47 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் சம்பாய் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.