இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு..!
வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து அண்மையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பலர் மாயமாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதைக் கண்டித்து பிரதமராக பதவி வகித்த ஷேக் ஹசீனா மற்றும் அவரின் அரசுக்கு எதிராக ‘மாணவர் பாகுபாடு எதிர்ப்பு இயக்கம்’ என்ற பெயரில் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், வன்முறை மூண்டது.
தனக்கு எழுந்த கடும் எதிர்ப்பையடுத்து பிரதமர் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா, வங்கதேசத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வெளியேறி இந்தியா வந்தார். அவரை மத்திய அரசு பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளது. எனினும் அவர் எங்கு தங்கவைக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் வெளியாகவில்லை.
இதனிடையே, தலைநகர் டாக்கா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்த போராட்டம் காரணமாக 440-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செவ்வாயன்று, வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன், இடைக்கால நிர்வாகத்தை அமைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் வங்கதேசம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்தார். இதையடுத்து வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸை நியமித்து அதிபர் முகமது ஷஹாபுதீன் செவ்வாய்க்கிழமை இரவு உத்தரவிட்டார்.
ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் பாகுபாடு எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்களுக்கும், அதிபருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த முடிவு எட்டப்பட்டது. முப்படைத் தளபதிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இடைக்கால அரசின் பிற உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளுடனான கலந்தாலோசனைக்குப் பிறகு நியமிக்கப்படுவார்கள் என அதிபரின் ஊடகச் செயலர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், போராட்டக்காரர்களால் வன்முறை வெடித்து பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கான உதவி எண்களை வெளியிட்டுள்ள அங்குள்ள இந்தியா தூதரகம், டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், ராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து வங்கதேசத்தில் தங்கியுள்ளனர், அதே நேரத்தில் அத்தியாவசியமற்ற ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் புதன்கிழமை காலை தாயகம் திரும்பியதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் டாக்காவில் உள்ள அனைத்து உதவி எண்களும் மீண்டும் செயல்படுவதாகவும், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கான உதவி எண்களை இந்திய தூதரகம் மீண்டும் அறிவித்துள்ளது. +8801958383679 +8801958383680 +8801937400591 ஆகிய தொலைபேசி உதவி எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.