கடலோர காவல் படைக்கு ஹெலிகாப்டர் தளம்..!
இந்திய கடலோர பாதுகாப்பை உறுதி செய்ய கடற்படையுடன் இந்திய கடலோர காவல் படையும் முக்கிய பங்காற்றி வருகிறது. கடலோர காவல் படை நவீன கப்பல்கள், விமானங்கள் மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
புதுச்சேரி கடலோர காவல் படையானது மரக்காணம் முதல் கோடியக்கரை வரை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்கிறது. இதற்காக நான்கு ரோந்து படகுகள், காரைக்காலில் 20 அடி நீளம் கொண்ட இரண்டு படகுகள், மூன்று கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
கடலோர பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ள மத்திய அரசு, புதுச்சேரி கடலோர காவல் படைக்கு நவீன ஹெலிகாப்டர்களை வழங்கி கடலோர பாதுகாப்பை பலப்படுத்தவும், புயல் மழை காலங்களில் மீட்பு பணிகளில் அவற்றை ஈடுபடுத்தவும் முடிவு செய்துள்ளது.
இதற்காக புதுச்சேரி விமான நிலையத்துக்கு சொந்தமான இடத்தில் கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் நிறுத்தும் தளத்தை (ஹேங்கர்) அமைக்க இந்திய விமான நிலைய ஆணையத்திடம் கோரப்பட்டது.
இதையடுத்து, புதிய விமான நிலையத்தின் டெர்மினல் கட்டிடத்திற்கு எதிரே டாக்ஸி டிராக்குடன் கூடிய ஏர் என்கிளேவை வரும் 18-ம் தேதி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
இது குறித்து இந்திய கடலோர காவல்படை தரப்பில் அதிகாரிகள் கூறுகையில்,
பேரிடர் காலத்தில் புதுச்சேரியில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியும். இதற்காகவும் கடலோர கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் 2 ஹெலிகாப்டர்கள், புதுச்சேரி இந்திய கடலோர காவல்படைக்கு வரவுள்ளது.
முதல்கட்டமாக தற்போது ஒரு ஹெலிகாப்டர் மட்டும் வரவுள்ளது. இதன் மூலம் மரக்காணம் முதல் கோடியக்கரை வரையிலான கடலோர பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளை விரைவுபடுத்த முடியும். இது மத்திய தமிழக பகுதியாக உள்ளது.
தென் தமிழகம் வரை சென்னையிலிருந்துதான் ஹெலிகாப்டர் செல்ல வேண்டும் என்ற நிலை இனி இருக்காது. கடற்கரையோரத்தில் கடலோர காவல் படையில் வான்வழி கண்காணிப்பு திறன்களை மேம்படுத்த முடியும்.
புதுச்சேரி துறைமுகத்தின் அருகே நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்த பிறகு, ஹெலிகாப்டர் இயங்குவதற்கான புதிய தளத்தை அமைக்க 4 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித் தர புதுச்சேரி அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்று தெரிவித்தனர்.