5 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வாய்ப்பு!
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்க்கூடும். குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (நவ.08) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 19 மாவட்டங்களில் இன்று (நவ.08) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்”. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.