இன்று தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழை..!
தமிழகத்தில், கடந்த சில நாட்களாக, பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி எஸ்டேட் பகுதியில், 11 செ.மீ., மழை பதிவானது.
இந்நிலையில், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து, 3.6 கி.மீ., உயரத்தில், இந்த சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் அநேக இடங்கள், புதுச்சேரியில் இன்றும் நாளையும், இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் மிதமான மழை பெய்யும் இடங்களின் எண்ணிக்கை குறையக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், நாளை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.