கொட்டித்தீர்க்கும் கனமழை; அவசர உதவி எண்கள் அறிவிப்பு..!

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு சுற்றுலச தலங்கள் மூடப்பட்டு உள்ளது. தொட்டபெட்டா, பைரன் பாரஸ்ட், லேம்ஸ்ராக், சூட்டிங் பாயின்ட், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.
ஊட்டியில் 6 இடங்களில் மரங்கள் விழுந்த நிலையில் உடனுக்குடன் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. மின்சாரம் தொடர்பான பாதிப்பு இருந்தால் 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும். அவசர கால உதவிக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
3 பேர் பத்திரமாக மீட்பு
நள்ளிரவு கூடலூர் ஓவேலி வனச்சரகத்தில் யானை விரட்டும் காவலராக பணியாற்றி வருகிறார் ராஜேஷ். இவர் விடுமுறை பெற்று கேரளா மஞ்சேரியை நண்பர்கள் ஆண்டோதாமஸ், 53, அருண் தாமஸ், 44, ஆகியோருடன், ஓவேலி அண்ணா நகர் - தருமகிரி சாலை வழியாக கூடலூர் நோக்கி காரில் சென்றுகொண்டு இருந்தார்.
செல்லும் வழியில் ஆற்றைக் கடக்க முயன்ற போது, கார் வெள்ளத்தில் சிக்கியது. மூவரும் தப்பிக்க வழியின்றி, காரின் மீது ஏறி நின்று சத்தமிட்டனர். கூடலூர் நிலைய தீயணைப்பு வீரர்கள், நள்ளிரவு 1:00 மணிக்கு, அப்பகுதிக்கு சென்று, போராடி அதிகாலை 3:30 மணிக்கு மூவரையும் உயிருடன் மீட்டனர்.
அவலாஞ்சியில் 215 மி.மீ., மழைப்பதிவு
கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை விபரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:
அவலாஞ்சி- 215
எமரால்டு- 94
பந்தலூர்- 93
சேரங்கோடு- 90
தேவாலா- 87
அப்பர் பவானி, கூடலூர்-74
செருமுள்ளி, ஓவேலி, பாடந்தொரை- 60