2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

தமிழகம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் பல்வேறு சுற்றுலாத் தளங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மார்ச் 1 முதல் நேற்று வரை இயல்பை விட 17 விழுக்காடு குறைவாக மழை பெய்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்பதால் செல்போன் மூலம் எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் உள்ள 2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.