கொட்டி தீர்த்த கன மழை... சென்னை புறநகரில் ரயில்,விமான சேவைகள் பாதிப்பு..!
ஆவடியில் நேற்று இரவு 13 செ.மீ. மழை கொட்டி தீர்த்ததால் இரயில் சேவை பாதிப்பு அடைந்தது. ஆவடி, பூவிருந்தவல்லி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு காற்று அடிக்காமல், இடி இடிக்காமல் நின்று நிதானமாக மூன்று மணி நேரத்திற்கு மேல் கன மழை கொட்டியது.
மழை பெய்த போது ஆவடி ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் இரவு 10:30 முதல் 2.30 மணி வரை ரயில் சேவை இல்லாமல் பொது மக்கள் பாதிப்படைந்தனர். நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் விரைவு ரயில் செல்லக்கூடிய பாதையில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கமாக பணி முடித்து இரவு வீட்டிற்கு ரயிலில் பெரும்பாலனவர்கள் செல்வார்கள். சென்னை அரக்கோணம் மார்க்கமாக திருத்தணி திருப்பதி செல்லக்கூடிய லோக்கல் மின்சார ரயில் நேற்று இரவு 3 மணி நேரத்திற்கு மேலாக மின்சார ரயில் சேவை இல்லாததால் ஆவடி ரயில் நிலைய மேலாளரிடம் முறையிட பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்போது ரயில் நிலையத்தில் மேலாளர் இல்லாததும்,ரயில் பயண சீட்டு வழங்கக்கூடிய வட இந்திய ரயில்வே ஊழியர் பொதுமக்களிடம் முறையான பதில் கூறாமலும் பயணிகளை உதாசின படுத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சரக்கு ரயிலை வழிமறித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ரயில் சேவை இல்லாததால் அம்பத்தூர் திருமுல்லைவாயில் அண்ணனூர் போன்ற ரயில் நிலையங்களில் காத்திருந்த ரயில் பயணிகள் தண்டவாளத்தில் செல்போன் டார்ச் லைட் பயன்படுத்தி சிலர் நடந்தே சென்றனர்.
அதேபோன்று நேற்று இரவு கொட்டிய மழையில் ஆவடி சேக்காடு சுரங்கப்பாதை மூழ்கியது. சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடிய கோபாலபுரம், சேக்காடு பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் புறநகரில் நேற்று இரவு பெய்த கன மழையினால் சென்னை விமான நிலையத்தில் 35 விமான சேவைகள் நிறுத்தப்பட்டது. அதனால் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.
திருச்சியில் இருந்து 68 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
டெல்லி, மும்பை, பெங்களூர், புவனேஸ்வர் உள்ளிட்ட 12 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில், வட்டமடித்து தத்தளித்துக் கொண்டிருந்தன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று புதன்கிழமை மாலையில் இருந்து விட்டு விட்டு, மழை பெய்து கொண்டு இருந்தது. இரவு 9 மணிக்கு மேல், மிகவும் கனமழையாக மாறி, இடி, மின்னலுடன் தொடர்ந்து மழை பெய்தது.
நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை இடி மின்னல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 13 வருகை விமானங்கள், 20 புறப்பாடு விமானங்கள், ரத்தான 2 விமானங்கள், மொத்தம் 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.