இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மதுரை, ஈரோடு, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக கனமழை பெய்தது.
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதேபோல் மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், சிம்மக்கல், தமுக்கம், கே.கே.நகர், உள்ளிட்ட மதுரை நகரின் பல இடங்களிலும் மழை பெய்தது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேட்டுப்பட்டி, திருக்கட்டளை, திருக்கோகர்ணம், இச்சடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்நிலையில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
newstm.in