ஸ்பெயின் நாட்டில் கனமழை : மன்னர் மீது சேற்றை வாரி அடித்த ஸ்பெயின் மக்கள்!
வரலாறு காணாத மழையில் தத்தளித்து வருகிறது ஸ்பெயின். இதில் வேலன்சியா மாகாணம் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. அங்கு மட்டும் 217 பேர் மழை, வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாகக் காட்சி அளிக்க நினைத்து பார்க்க முடியாத இயற்கை சீற்றத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பெருத்த சேதாரத்துக்கு உள்ளான வேலன்சியா மாகாணத்தில் உள்ள பைபோர்ட்டா நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மன்னர் பிலிப், ராணி லெட்டிசியாவுடன் சென்றார். பாதிக்கப்பட்ட மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இருவரின் வருகையைக் கண்டு ஆத்திரம் அடைந்த அவர்கள், எதிர்ப்பு முழக்கமிட்டனர். ஆனாலும் பாதுகாவலர்களுடன் மன்னரும், ராணியும் வீதிகளில் நடந்து வர, அதிருப்தி அடைந்த மக்கள், திரும்பி போகுமாறு முழக்கமிட்டபடியே கீழே கிடந்த சேற்றை எடுத்து அவர்கள் மீது வீசினர். நொடிப் பொழுதில் இந்த சம்பவத்தால் மன்னர் பிலிப், முகம் மற்றும் ஆடைகள் சேறாகின.
அவர்களை சமாதானப்படுத்திய மன்னர் பிலிப், மெதுவாக அங்கிருந்து தமது பாதுகாவலர்களுடன் நடந்து சென்றார். மன்னர் மீது சேற்றை வாரியிறைத்த மக்களின் ஆத்திரம், அந்நாட்டில் பரபரப்பான விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.