சென்னையில் வெளுத்து வாங்கும் மழை..!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், இலங்கை கடற்கரை பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலியாக சென்னையில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், ராயப்பேட்டை, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சைதாப்பேட்டையில் காற்றுடன் கூடிய சாரல் மழை கொட்டி வருகிறது. திருவான்மியூர், அடையாறு, வேளச்சேரி, தரமணி, துரைப்பாக்கம்,கிண்டி, பரங்கிமலை, கொட்டிவாக்கம், பாலவாக்கம், சேலையூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
காலை முதலே மழை கொட்டி வருவதால் சாலைகளில் நீர் தேங்கி கடும் போக்குவரத்தில் வாகன ஓட்டிகள் சிக்கி தவித்தனர். மதுரவாயல் சாலையில் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.