நெஞ்சை உலுக்கும் சோகம்..! தாயின் இறுதிச் சடங்கு செலவுக்காக பிச்சையெடுத்த 11 வயது மகள்!
தெலுங்கானா மாநிலம் தன்னூர் [Thanoor] மண்டலத்தில் உள்ள பெல்தரோடா [Bheltharoda] கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காமணி [35 வயது]. இவரது கணவர் 12 வருடங்களுக்கு முன்பே உயிரிழந்த நிலையில் விவசாய தினக்கூலியாக வேலை செய்து தனது ஒரே மகள் துர்காவை [11 வயது] வளர்த்து வந்தார். துர்கா பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
நேற்று முன்தினம் துர்காவை கங்காமணி கண்டித்து பேசியுள்ளார். இதனால் துர்கா கோபித்துக்கொண்டு தனது பெரியம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். ஆனால் வீட்டில் சீலிங் காத்தாடியில் தாய் கங்காமணி தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இருந்ததைக் கண்டு துர்கா செய்வதறியாது திகைத்துள்ளார். பக்கத்துக்கு வீட்டுக் காரர்களிடம் சென்று துர்கா கூறவே, அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்தான் தாயின் இறுதிச்சடங்கிற்குப் பணம் இல்லாததால் வீட்டின் முன் இருந்த வீதியில் தாயின் சடலத்தைக் கிடத்தி இறுதிச்சடங்கு செலவுக்குக் காசு வழங்கும்படி வருவோர் போவோரிடம் யாசகம் வேண்டியுள்ளார். இதை அறிந்த உள்ளூர் போலீஸ் சிலரும், துர்காவின் ஆசிரியர்களும், பிஆர்எஸ் முன்னாள் அமைச்சர் கேடிஆர் அருவுறுத்தலின் பேரில் அப்பகுதியை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் சிலரும் காசு வழங்கிக் கங்காமணியின் இறுதிச் சடங்கைச் செய்ய உதவியுள்ளனர்.