தமிழ்நாடு முழுவதும் கொட்டும் மழையில் ஹெல்த் வாக் திட்டம் தொடக்கம்..!
ஜப்பானில் மக்களிடையே நடைபயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த 8 கி.மீ-க்கு ஹெல்த் வாக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவர் தினமும் 10,000 அடிகள் நடந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால், அதற்கேற்றவாறு இச்சாலைகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
அதேப்போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், ‘ஹெல்த் வாக்’ சாலைகள் அமைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.அதன்படி அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்த நிலையில், சென்னை முத்துலட்சுமி பூங்காவில் இருந்து கடற்கரை சாலை வரையுள்ள 8 கிலோமீட்டர் ஹெல்த் வாக்’ நடைபயிற்சிப் பாதை திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.
மேலும் கொட்டும் மழைக்கு நடுவிலும் குடைபிடித்தபடி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், தி இந்து’ குழும இயக்குநர் என்.ராம் உள்ளிட்டோரும் மழையில் குடைபிடித்தபடி நடைபயிற்சி மேற்கொண்டனர்.
அதன்பின்னர் தமிழ்நாடு முழுவதும் ’ஹெல்த் வாக்’ நடைப்பயிற்சி பாதை திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.அதன்படி மதுரை ரேஸ்கோர்ஸ் சுற்றுச் சாலையில் தகவல் தொழில்நுட்பவியல் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தியுடன் கலந்து கொண்டு நடைப்பயிற்சியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், துணை மேயர் நாகராஜன்,மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருப்பூர் மாவட்ட்டம் காங்கேயம் தெற்கு ஒன்றிய சிவன்மலையில் தமிழ்வளர்ச்சி செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், நடைபயிற்சியை தொடங்கி தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர், மாநகராட்சி மேயர் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் டி.பாஸ்கர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி MLA அவர்கள் கலந்துகொண்டு நடைபயிற்சியை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்று ஹெல்த் வாக் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோவை பந்தய சாலையில் இருந்து சுங்கம் வழியாக வந்தடையும் 8 கிமீ நடைபாதையை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையாளர், மேயர் உள்ளிட்டோர் என பலர் கலந்து கொண்டனர்.
இது போன்று தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.