விஜய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு த.வெ.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை..!

த.வெ.க. பிரமுகரான விக்ரம் (வயது 34.) கடந்த சில மாதங்களுக்கு முன் மினிலாரி ஒன்றை விலைக்கு வாங்கினார். இதற்காக பல இடங்களில் கந்து வட்டிக்கு கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விக்ரம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். எனவே அவரால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் வருமானம் இல்லாமல் போனதால் வட்டிக்கு கடன் வாங்கியவர்களிடம் அவரால் பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதுதொடர்பாக கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி விக்ரமிற்கு போன் செய்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த விக்ரமிற்கு அவரது மனைவி ஆறுதல் கூறி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது விக்ரம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது வீட்டில் விக்ரம் தன் கைப்பட த.வெ.க. தலைவர் விஜய்க்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.
3 பக்கம் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், நான் கடன் வாங்கிய தொகைக்கு சரியாக வட்டி செலுத்தி வந்தேன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதால் வட்டி பணத்தை சரியாக செலுத்த முடியவில்லை. எனவே கடன் கொடுத்தவர்கள் என்னிடம் பணத்தை கேட்டு சித்ரவதை செய்தனர். மேலும் தவறாக பேசியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன்.
விஜய் அண்ணா, என்னோட கடைசி ஆசை இதுபோன்ற 10 மற்றும் 15 சதவீதம் வட்டிக்கு கொடுத்து சித்திரவதை செய்யும் அனைவரும் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் ஆட்சியில் இந்த மாதிரி வட்டிக்கு விடுபவர்கள் பயப்பட வேண்டும் அண்ணா! தயவுசெய்து என் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ஏதேனும் படிப்புக்கும், வாழ்க்கைக்கும் பண உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். தனது மகள் மிகவும் நன்றாக படிப்பார் படிக்க வையுங்கள் அண்ணா ப்ளீஸ். உங்களை நம்பித்தான் உயிரை விடுகிறேன்" ப்ளீஸ் ஹெல்ப் மை பேமிலி" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இறந்த பின் தனது உடல் உறுப்புகளை எடுத்துக்கொண்டு தன் குடும்பத்திற்கு பண உதவி செய்யுங்கள் என கேட்டுக் கொண்டதோடு அரசும் கந்துவட்டி விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.