என் காசை ஆட்டைய போட்டுட்டான்... ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த சரவணன் மீனாட்சி சீரியல் நடிகர்..!

சின்னத்திரை நடிகர் செந்தில் தனது வீடியோவில் கூறியிருப்பதாவது: எவ்வளவுதான் படித்து உலக அறிவு இருப்பதாக நினைத்தாலும் ஒருத்தன் ஆன்லைன்ல வாட்ஸ் ஆப் மெசேஜ்ல ரூ.15 ஆயிரத்தை என்னிடம் இருந்து திருடிவிட்டான்.
கதையை சொல்கிறேன் கேளுங்கள். உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். கோவையில் எனக்கு தெரிந்த ஒரு பெரிய ஹோட்டல் அதிபர் இருக்கிறார். அவருடைய வாட்ஸ் ஆப்பில் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என வந்தது. அவரிடம் இருந்து ரொம்ப அரிதாக வேறு ஏதாவது மெசேஜ்தான் வரும் ஆனால் இது போல் உதவி கேட்டு மெசேஜ் வந்தது இதுதான் முதல்முறை. நானும் என்ன உதவி வேண்டும் சொல்லுங்கள் என்றேன்.
அதற்கு அவர் பணம் வேண்டும் என்றார். எவ்வளவு வேண்டும் என்றேன், ஒரு 15 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்றார். உங்களுக்கு பணம் ரொக்கமாக வேண்டுமா என கேட்டேன். அதற்கு அவர் இல்லை எனக்கு ஜிபே செய்துவிடுங்கள் என கூறி ஒரு எண்ணை அனுப்பினார்.
நான் என்னிடம் ஜிபே இல்லை என்றேன். மேலும் யாரையாவது அனுப்புங்கள் நான் பணத்தை கொடுத்தனுப்புகிறேன் என்றேன். அதற்கு அவர் எனக்கு அக்கவுண்ட்டில்தான் வேண்டும். வங்கிக் கணக்கில் டிரான்ஸ்பர் செய்ய முடியுமா என கேட்டார். நானும் செக் செய்கிறேன் என்றேன். நானும் எப்படியோ ஜிபேவில் பணம் அனுப்பிவிட்டேன். பணத்தை அனுப்பிய பிறகுதான் அதில் யோகேந்திரன் என வந்தது. மேலும் கோவை தொழிலதிபர் தனது நம்பருக்கு அனுப்புமாறு சொல்லாமல் வேறு எண்ணை தருகிறார் என்றால் அது மோசடியா இருக்குமோ என நினைப்பதற்குள் பணம் எல்லாம் போச்சு!
இதையடுத்து அந்த தொழிலதிபருக்கு போன் செய்தேன். அவர் "என்னா செந்தில் ஏன் பணத்தை அனுப்பினீர்கள். என் வாட்ஸ் ஆப்பை எவனோ ஹேக் செய்துவிட்டான். இதுவரை எனக்கு 500 போன்கள் வந்துவிட்டன, பலருக்கு அது நானில்லை என்பதை சொல்லிவிட்டேன். சிலர் பணத்தை அனுப்பியுள்ளார்கள்" என்றார். சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளேன். இது போல் வாட்ஸ் ஆப்பில் யாராவது பணம் கேட்டால் நீங்கள் யாருக்கும் அனுப்பாதீர்கள். சம்பந்தப்பட்டவர்களை போனில் தொடர்பு கொண்டு உண்மைதானா என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள் என செந்தில் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக இது போன்ற டிஜிட்டல் மோசடிகள் நிறைய நடந்துள்ளன. ஏடிஎம் கார்டு லாக்காகிவிட்டதாக கூறி கடவுச்சொல் கேட்பது, மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும், உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது என்றெல்லாம் மெசேஜ் வந்தால் இதை நம்பி யாரும் கடவுச்சொற்களையோ, ஓடிபி எண்களையோ பணத்தையோ அனுப்ப வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்துகிறார்கள்.