என் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர்...ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது - ராமதாஸ்
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/2743048620f8d662012bfd646dfbcc73.jpg?width=836&height=470&resizemode=4)
பாமக நிறுவனர் ராமதஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
நீண்ட பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்திலிருந்து வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழகத்தில் மிகவும் நெருக்கடியாக கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்று, அதை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டவர். பாமக-வுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். என் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர். தைலாபுரம் தோட்டத்தில் பாமக-வின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் பாமக-வின் கொள்கை வழிகாட்டிகளாக பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் உருவச் சிலைகள் அமைக்கப்பட்ட போது, அவற்றில் பெரியாரின் சிலையை இளங்கோவனை அழைத்து தான் திறக்கச் செய்தேன். தமிழக அரசியலில் அவர் பயணிக்க வேண்டிய தொலைவும், படைக்க வேண்டிய சாதனைகளும் ஏராளமாக இருந்த நிலையில் அவரது மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.
ஈவிகேஎஸ் இளங்கோவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.