1. Home
  2. தமிழ்நாடு

10 ஆண்டுகால வரவு செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு!

1

தமிழக அறநிலையத் துறை ஆணையர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “சிதம்பரம் நடராஜர் கோயில் 2008 முதல் 2014 வரைஅறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது பொது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் கோயில் உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது ரூ.3 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியநிலையில், தற்போது ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே வருமானம் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கோயிலின் வருவாய் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், “கோயில் நிர்வாகம் பொது தீட்சிதர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கோயில் கணக்கில் செலுத்தாமல், தீட்சிதர்களே எடுத்துக் கொள்கின்றனர். இதனால் கோயில் வருமானம் பெருமளவு குறைந்துவிட்டது. எனவே, தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள காலத்தில் எவ்வளவு வருமானம் வந்தது, அது எங்கே போனது என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.

பொது தீட்சிதர்கள் தரப்பில், ‘‘அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கோயில் இருந்தபோது, பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. பூஜைகள், அர்ச்சனை, தரிசனத்துக்கு தனித்தனியாக டிக்கெட் அடித்து கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதனால் அதிக வருவாய் கிடைத்தது. பொதுதீட்சிதர்கள் வசம் கோயில் வந்தபிறகு, உண்டியல் அகற்றப்பட்டு விட்டது. பூஜை, அர்ச்சனை, தரிசனத்துக்கென எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை தீட்சிதர்கள் எடுத்துக் கொள்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். புராதன சின்னமான சிதம்பரம் நடராஜர் கோயிலை முறையாகப் பராமரிக்க வேண்டும். அதற்கு பெருந்தொகை தேவைப்படும் சூழலில், கோயிலைப் பராமரிக்கவும், பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கவும் பொது தீட்சிதர்களிடம் என்ன வருவாய் ஆதாரம் உள்ளது? கோயில் காணிக்கையைத் தவிர்த்து, தீட்சிதர்களுக்கு வேறு வருவாய் ஆதாரங்கள் உள்ளனவா?”என்று கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து நீதிபதிகள், “கோயிலில் உண்டியல் எப்போது அகற்றப்பட்டது? பூஜைகள், அர்ச்சனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லையா? ஒவ்வோர் ஆண்டும் முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படுகிறதா? இந்த கோயில் பொது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, அதாவது 2014 முதல் தற்போது வரையிலான கடந்த 10 ஆண்டுகால வரவு – செலவு கணக்குகளை முழுமையாக தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Trending News

Latest News

You May Like