நிபந்தனை ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்..!
பிராமணர் உட்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பிசிஆர் எனப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த நவம்பர் 3-ம் தேதி இந்து மக்கள் கட்சி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில், பிரபல நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார்.. இதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் அளித்த புகாரின்பேரில், எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவருக்கு சம்மன் அளிக்க சென்றபோது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் தலைமறைவானதாக தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்த சூழலில், முன்ஜாமீன் கோரி கஸ்தூரி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.. இதையடுத்து, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில் படத் தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கியிருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பிறகு அங்கிருந்து அவரை சென்னைக்கு அழைத்து வந்து, ஒன்றரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் புழல் மகளிர் சிறையிலும் அடைத்தனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து, கஸ்தூரி தூக்கமின்றி தவித்து வருவதாகவும், சரியாக சாப்பிட முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது..
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது. இதனால் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைக்குமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தான் இன்று மாலையில் நடிகை கஸ்தூரிக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.