1. Home
  2. தமிழ்நாடு

#HBD DHONI : தோனி கடந்து வந்த பாதையும் தமிழ் சினிமா பாடல்களும்!

1

நாம் விரும்பி பார்க்கும் கிரிக்கெட் விளையாட்டில் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு சில வீரர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவர். அப்படி விளையாடுபவர்களில் இந்தத் தலைமுறையினரின் எவர்கிரீன் கிரிக்கெட் "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்" வேற யாரு நம்ம கேப்டன் கூல் எம்.எஸ்.தோனி தான்.

எந்தவித கிரிக்கெட் பின்ணணியும் இல்லாமல் தன் சொந்த முயற்சியில் ராஞ்சியிலிருந்து வந்து உலகப் புகழ்பெற்ற எம்.எஸ்.டி க்கு இன்றுதான் பிறந்தநாள். 'தல' அஜித்தைப் போல தன்னைத் தானே செதுக்கியதாலோ என்னவோ ரசிகர்களால், இவரும் 'தல' என்று அழைக்கப்பட்டார்.

விளையாட்டிலும் சக வீரர்களிடம் பழகுவதிலும் நன்கு கை தேர்ந்தவராகி சச்சின், கங்குலியைத் தொடர்ந்து இவர் கேப்டன் பதவியில் அமர்ந்தார். சக வீரர்களின் நம்பிக்கையை விரைவில் பெற்ற இவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு, "தல போல வருமா" என்று மற்ற வீரர்கள் அவரை போற்றிப் புகழ்ந்தனர்.

மேலும் மேலும் வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்த தோனியை, மீடியா மக்கள் சர்ச்சையில் சிக்க வைக்காமல் விடுவார்களா? நடிகை லஷ்மி ராய் திடீரென்று தோனி வாழ்க்கையில் வந்து "விளையாடு மங்காத்தா" என்று ஆடி பாடினார். எதற்கும் அசராத தோனி அவருக்கும் அசராமல் "விடமாட்டா எங்காத்தா" என்று சொல்லிவிட்டு திடீரென தனது பள்ளி நண்பர் சாக்‌ஷியை மணமுடித்து வந்து பெண் ரசிகர்களை ஏமாற்றினார்.

விளையாட்டுத் துறைக்கு தோனி ஆற்றிய பணிக்காக பத்மபூஷன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. அந்தத் தருணத்தில் பெருமிதம் கொண்ட மனைவியின் கண்கள் நமக்கு நினைவுபடுத்திய பாடல், "நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு."

1

கூல் கேப்டன்சி, அழகான இல்வாழ்க்கை, அமைதியான ஆட்டம் என்று ஃபுல் ஃபார்மில் சென்று கொண்டிருந்தார் தோனி. 2011-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்கு தோனியின் தலைமையில் தயாரானார்கள் இந்திய வீரர்கள். "பொதுவாக எம்மனசு தங்கம் ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்" என்று தோனி கிளம்ப "அண்ணனுக்கு ஜே" என்று கோஷமிட்டுக்கொண்டே அவரைத் தொடர்ந்தனர் மற்ற கிரிக்கெட்டர்ஸ்.

இந்திய அணிக்கு 1984 உலகக் கோப்பைக்கு பிறகு பல வருடங்களாக உலகக் கோப்பை எட்டிக் கூடப் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தது. தோனியின் கேப்டன்சியில் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்று உறுதியாக இருந்தனர் ரசிகர்கள். அதற்கேற்றார்போல் "வெற்றிக்கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா" என்று வெற்றிக் கொடி நாட்டி வந்தார் தோனி.

டி20 மேட்சுகள் வந்தவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த தோனியை சென்னை ரசிகர்கள் தலைவனாகவே கொண்டாடினார்கள். ஐபிஎல் சீசன்களில் அவரைப் பற்றிய செய்திகளும், மீம்ஸ்களுமே சமூக வலைத்தளங்களை நிரப்பும்.

ஒருநாள் போட்டிகளிலேயே பந்தை வீணடிக்காமல் அசால்ட்டாக விளையாடும் தோனி டீ-20யில் பந்து மட்டைக்கு வருவதற்கு முன்னாலேயே சிக்ஸருக்கு அனுப்பினார். "நான் அடிச்சா தாங்கமாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட மோதி பாரு வீடு போய் சேர மாட்ட" என்ற நோக்கில் இவர் விளையாட எதிரணியினருக்கு "ஹே! அவன் எப்படிப் போட்டாலும் அடிக்கிறான் டா" என்பதே நிரந்தர வாக்காகிப் போனது.

1

சில தருணங்களில் அவருக்கு வாய்த்த வீரர்கள் பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலுக்கு அமைந்த வேலைக்காரர்களைப் போல் இருந்தாலும் "நீங்கள் ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்" என்று களமிறங்கி மேட்ச் வின்னர் ஆக இருந்து கூடுமானவரையில் வின்னிங் ஷாட்டை ரசிகர்கள் மனதில் ஆணி அடிப்பது போல் அடித்துப் பதிய வைத்தார்.

டி20யிலும் வெற்றி வாகை சூடிக்கொண்டிருந்த தோனிக்கு அடுத்த சறுக்கல். சிஎஸ்கே அணி இரண்டு ஆண்டுகள் விலக்கி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் டி20 மேட்சில் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி மீண்டும் பங்கேற்றது. "வந்துட்டேன்னு சொல்லு! திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" என்று எல்லா மீடியாக்களிலும் சிங்கமாக காட்சியளித்தார் தோனி. அனைவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் "சிங்கம் போல நடந்து வர்றான் எங்க பேராண்டி, சும்மா சீண்டியவன் தாங்க மாட்டான் உதயலைத் தாண்டி, ஏ.... இந்தா...இந்தா... இந்தா…" என்று ஒவ்வொரு அணியாக திருப்பி அனுப்பி ஹைதராபாத் அணியினரோடு இறுதியில் மோதி சென்னை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் தோனி.

ஆனால் இந்த முறை அவரைக் காட்டிலும் ரசிகர்கள் மனதில் மேலோங்கி நின்ற விஷயம் அப்பா தோனி மற்றும் மகள் ஸிவாவின் அன்பு மட்டுமே. வெற்றிக் கோப்பையை மற்ற வீரர்கள் ரசிக்கட்டும் என்று விட்டு விட்டு "வா, வா, என் தேவதையே, என் வாய் பேசும் தாரகையே" என்று ஸ்டேடியத்தில் தன் மகளை ஆறத் தழுவிய காட்சி வைரலானது அறிந்ததே.

ஜூலை 7 - இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோனிக்கு... "நலம் வாழ எந்நாளும் எங்கள் வாழ்த்துகள்".

Trending News

Latest News

You May Like