1. Home
  2. தமிழ்நாடு

மேல்முறையீடு செய்தும் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லையா..? முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

1

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்திருந்தார். இதில் 1 கோடியே 6 லட்சத்து 49 ஆயிரத்து 242 பேருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.இதில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் இப்போது புதிய பயனாளிகளாக 7 லட்சத்து 35 ஆயிரத்து 58 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நேற்று முன்தினமே ரூ.1000 சென்றடைந்துள்ளது.

இதன் தொடக்க விழா தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து இதில் 6 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது., குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பு சொன்னோம். அப்போது சிலர் என்ன சொன்னார்கள் என்றால், இதெல்லாம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதி. இவர்கள் ஆட்சிக்கு வரவே மாட்டார்கள். இதுமாதிரி ஒவ்வொருவரும் நிறைய சொன்னார்கள். கட்டம் எல்லாம் பார்த்தார்கள்.

ஆனால் நீங்கள் எல்லோரும் என்ன சொன்னீர்கள். என்றால், தி.மு.க.தான் ஆட்சிக்கு வரவேண்டும். தி.மு.க. சொன்னால் வாக்குறுதியை நிறைவேற்றும். கலைஞர் மகன் ஸ்டாலின் தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று ஓட்டு போட்டு பதிலடியும் தந்தீர்கள். உங்களுடைய கட்டளைக்கு கட்டுப்பட்டவன் நான். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொன்னால், சொன்னதை நிச்சயம் செய்வேன். அதற்கு அடையாளமாகத்தான் மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை கொடுக்கிறோம்.

அதனால்தான் உங்கள் முன்னாடி கொஞ்சம் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன். கடந்த செப்டம்பர் 15-ந்தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தேன். செப்டம்பர் 15, அக்டோபர் 15 என 2 மாதத்துக்கும் 2 ஆயிரம் ரூபாயை 1 கோடியே 6 லட்சம் சகோதரிகள் வாங்கிவிட்டார்கள். இந்த முறை முன்கூட்டியே (நேற்று) மாலைக்குள் அடுத்த 1000 ரூபாயும் வந்து சேர்ந்து விடும். மகளிருக்கு சொத்துரிமை, கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு கொடுத்து உங்களுடைய உரிமைகளுக்காக பாதுகாவலராக இருந்த தமிழினத் தலைவர் கலைஞருடைய நூற்றாண்டு விழாவில் தொடங்கி கொடுக்கப்படுகிற தொகை இதுவாகும். இது உதவித் தொகையல்ல. உரிமைத் தொகை. இந்த உரிமைத் தொகை உண்மையிலேயே தேவையும், தகுதியும் உள்ள அனைத்து மகளிருக்கும் போய் சேர வேண்டும் என்பதில் நம்முடைய அரசு கவனமாக இருந்தது.

புதிய பயனாளிகளான என் அன்பு சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கான 1000 ரூபாயை நேற்று (நேற்று முன்தினம்) உங்கள் கணக்கில் வரவு வைத்து விட்டோம். உங்களோடு சேர்த்து மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1000 ரூபாய் இனி வாங்க போகிறீர்கள்.நீங்கள் மட்டுமல்லா தகுதியுள்ள யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். அதனால்தான் விண்ணப்பித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்கிற காரணத்தை குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தோம்.

அந்த காரணம் ஏற்புடையதா? இல்லை என்றால் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கினோம். அதை பயன்படுத்தி மேல்முறையீடு செய்தார்கள். அவர்களது விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம். சரிபார்ப்பு அலுவலர்கள் கள ஆய்வு செய்து தகுதிபெறும் மகளிருக்கு வருகிற டிசம்பர் மாதத்தில் இருந்து திட்டம் மூலமாக 1000 ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Trending News

Latest News

You May Like