பரபரப்பு..! தமிழகத்தில் 20 இடங்களில் என்.ஐ.ஏ ரெய்டு!

சென்னை மற்றும் மயிலாடுதுறையில் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புறநகர் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமலைவாசலில் 15 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரத்தில் தொடங்கிய ரெய்டு நடவடிக்கையால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு உதவியாக தமிழக காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐ.எஸ் என்பது தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம்.
இவர்கள் ஆயுதம் தாங்கிய குழுவாக பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக சிரியா, ஈராக், மத்திய கிழக்காசியா, தெற்காசியா நாடுகளில் உள்ளனர். சில நாடுகளில் ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவிலும் மறைமுகமாக ஆட்களை திரட்டி வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அதில் தமிழகமும் அடங்கும். இதுதொடர்பாக பல்வேறு சமயங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஐ.எஸ் தொடர்பான குறிப்பேடுகள், தகவல் தொடர்பு பரிமாற்றங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் லேப்டாப், ஹார்ட் டிஸ்க், மொபைல் போன், சிம் கார்டு உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஐ.எஸ் அமைப்பினருக்கு ஆதரவாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர்.
துப்பாக்கி, வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றை சேகரித்து வருவது, அதற்கான நிதி பெறும் முயற்சியில் ஈடுபடுவது, பயங்கரவாதிகளை தப்பிக்க வைக்க உதவுவது என இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது புகார்கள் வருகின்றன. இதன் நீட்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பிற்கும் தடை விதிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.