அடைக்கலம் புகுந்த இளம்பெண் துன்புறுத்தல்.. கணவன் - மனைவி கைது..!
சென்னை, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜய். இவருடைய மனைவி சுருதி (22). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்சனையில் விஜய் தன் மனைவி சுருதியை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து விசாரித்த எண்ணூர் போலீசார், விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சமீபத்தில் அவர் ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார்.
கணவருடன் வாழ பிடிக்காத சுருதி, திருவொற்றியூர் என்.டி.ஓ. குப்பம் குடியிருப்பு 'பி - பிளாக்' 118வது குடியிருப்பில் வசிக்கும் தன் தோழியான ஐஸ்வர்யா (22) என்பவரிடம் தஞ்சம் அடைந்தார்.
ஐஸ்வர்யாவின் கணவர் சூரஜ் ஜெனிஸ் கண்ணன் (29) துவக்கத்தில் சுருதியை நல்லபடியாக பார்த்த தம்பதி, பின்னர் வேலைக்காரியை போல் நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து, 'கருமுட்டையை விற்றால் 20 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்' என சுருதியை மூளை சலவை செய்தனர். இதையடுத்து, பெண் புரோக்கர் மூலம் தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் கருமுட்டையை விற்க முடிவு செய்யப்பட்டது.
தனியார் மருத்துவமனையில் சென்று விசாரித்த போது, கருமுட்டை பெற 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் தருவதாக கூறியுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுருதி பயந்து போய் பிரிந்து சென்ற கணவர் விஜயிடம் கூறியுள்ளார்.
விஜய், மனைவியை வீட்டிற்கு வந்துவிடும் படி அறிவுறுத்தியுள்ளார். வீடு திரும்பிய சுருதி தன் தோழியான ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவரிடம் சொல்லி விட்டு வரலாம் என்று சென்றுள்ளார்.
கருமுட்டையை விற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த தோழி ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவர் சூரஜ் ஜெனிஸ் கண்ணன் ஆகியோர் சுருதியை சரமாரியாக தாக்கி அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
அவர்களிடமிருந்து தப்பிய சுருதி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.விசாரித்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.