பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கால அவகாசம் நீட்டிப்பு!

ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்வதற்கான அவகாசம் 2026 ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், ஆதார் கார்டை அப்டேட் செய்ய நினைப்பவர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. ஏனெனில், ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் (2025 ஜூன் 14) நேற்றோடு முடிந்துவிட்டது. இதுபோன்ற சூழலில்தான் கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் தங்களுடைய ஆதார் கார்டை இலவசமாகப் புதுப்பிக்க விரும்புவோர் தங்கள் ஆவணங்களை இலவசமாகப் பதிவேற்றுவதன் மூலம் ஆதாரில் மாற்றங்களைச் செய்யலாம். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஆதார் கார்டுதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதார் அட்டைதாரர்கள் myAadhaar போர்டல் மூலம் இலவசமாக ஆன்லைனில் அப்டேட் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், "லட்சக்கணக்கான ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு பயனளிக்கும் வகையில் UIDAI இலவச ஆன்லைன் ஆவணப் பதிவேற்ற வசதியை 2026 ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த இலவச சேவை MyAadhaar போர்ட்டலில் மட்டுமே கிடைக்கும். UIDAI மக்கள் தங்கள் ஆதார் ஆவணங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க ஊக்குவிக்கிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள், குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் ஆதாரைப் பெற்று அதன் பின்னர் தங்கள் ஆவணங்களைப் புதுப்பிக்காதவர்கள், ஆதார் தரவுத்தளத்தில் தங்கள் பதிவுகளைப் புதுப்பிக்குமாறு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அவர்களுடைய பெயர், முகவரி அல்லது பிற விவரங்கள் மாறிய நபர்களும் அப்டேட் செய்வது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
உங்கள் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பயோமெட்ரிக் விவரங்கள் (கைரேகை, கருவிழி) அல்லது புகைப்படத்தைப் புதுப்பிக்க நீங்கள் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்குச் சென்று அப்டேட் செய்ய வேண்டும். அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இலவச ஆவண புதுப்பிப்பு சேவை myAadhaar போர்டல் மூலம் மட்டுமே கிடைக்கிறது. 2026 ஜூன் 14ஆம் தேதி வரை மட்டுமே இந்த இலவச சேவை கிடைக்கும். இந்தக் காலக்கெடுவுக்குப் பிறகு வழக்கமான கட்டணங்கள் விதிக்கப்படும்.