1. Home
  2. தமிழ்நாடு

இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை! செங்கோட்டையன் தகவல்!

இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை! செங்கோட்டையன் தகவல்!


கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் குறையாததால் தற்போது பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு எந்தவித முடிவும் எடுக்கவில்லை என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொடிய கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு அக்டோபர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இருப்பினும் கல்வி நிறுவனங்கள் திறக்க தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தனியார் பள்ளி மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழியிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.மத்திய அரசு நாடு முழுவதும் முறையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகளைத் திறந்துகொள்ளலாம் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன் பேரில் ஒரு சில மாநிலங்களில் அக்டோபர் 15-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

ஆனால், தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதா என நவம்பர் 11-ம் தேதிக்குள் அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்

இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை! செங்கோட்டையன் தகவல்!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்குறுகள் இல்லை. பள்ளிகள் திறப்பது குறித்து அனைத்துதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னரே முடிவு செய்யப்படும். பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் அறிவிப்பார். மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு 10 நாட்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்படும்.
மேலும், நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்க பள்ளிகல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like