மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை!
பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திட்டமிட்டப்படி ஜூன் 2 ஆம் தேதி ஒன்று முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் ஜுன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், மாவட்ட கல்வி அலுவலர்களுடன் காணொளி காட்சி வாயிலாக அமைச்சர் அன்பின் மகேஷ் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதில், “கிராமப்புறங்களில் இருந்து பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு பேருந்து வசதி உள்ளதா என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு வரும் வகையில் பேருந்து சேவை தேவைப்பட்டால் அவற்றை கண்காணித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி பேருந்து சேவையை ஏற்படுத்த வேண்டும். வறுமையின் காரணமாக தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர்கள் சிலர் தனியார் பள்ளிகளில் கல்வி சான்றிதழை வாங்க முடியாத சூழல் உள்ளதாக தகவல் வருகிறது.
மெட்ரிக் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர்கள் தனியார் பள்ளி நிர்வாகங்களுடன் பேசி மாணவர்களின் கல்விச் சான்றிதழை உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட உள்ள ஜூன் மாதம் இரண்டாம் தேதி அன்று மாணவர்களுக்கான புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப் பைகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.
மாணவர்களுக்கு புத்தகங்களை பள்ளி திறக்கும் நாள் அன்று வழங்கும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகப் பொருட்கள் வந்துள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
.png)