பென்சன் வாங்குவோர் கவனத்திற்கு.. கால அவகாசம் நீட்டிப்பு !!
பென்சன் வாங்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் ஆண்டுதோறும் ஜீவன் பிரமான பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அதாவது, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழ் என்ற ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இதையே ஜீவன் பிரமான பத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.
இந்தப் பத்திரத்தை பென்சன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் மாத இறுதியில் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும். கொரோனா, மழை போன்ற பிரச்சினைகளால் மூத்த குடிமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு தற்போது சலுகை வழங்குகிறது. அதாவது, ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பது எளிதான காரியம்தான். முன்பெல்லாம் இதற்காக மூத்த குடிமக்கள் வங்கிக் கிளைகளுக்கு நடையாய் நடக்க வேண்டியிருக்கும். ஆனால் இப்போது அது எளிதாகிவிட்டது. வங்கிக் கிளைக்கு போகத் தேவையில்லை. தபால் காரர்கள் வாயிலாக வீட்டுக்கே வந்து ஆயுள் சான்றிதழ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் வீட்டில் அமர்ந்தபடியே வீடியோ கால் மூலமாக ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் வசதியும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
பொதுச் சேவை மையங்களிலும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். பென்சனர்களுக்கு ஏதுவாக இதுபோன்ற நிறைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பென்சனர்கள் இந்த வேலையை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பென்சன் தொகை வருவதில் சிக்கல் ஏற்படலாம்.
newstm.in