ஹேப்பி நியூ இயர்...முதல் நாடாக புத்தாண்டை வரவேற்ற கிரிபாட்டி!
2024இன் கடைசி நாளில் நாம் இருக்கிறோம். இன்னும் சில மணி நேரங்களில் நமக்குப் புத்தாண்டு பிறக்க உள்ளது. அதேநேரம் உலகின் சில பகுதிகள் ஏற்கனவே புத்தாண்டை வரவேற்க ஆரம்பித்துவிட்டன.
அதன்படி உலகிலேயே முதல் நாடாகப் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபார்ட்டி லைன் தீவுகள் 2025ஐ வரவேற்றுள்ளது. கிரிபார்ட்டி லைன் தீவில் வசிக்கும் மக்கள் வான வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்றனர். தங்கள் நாட்டு பாரம்பரியபடி அவர்கள் வறுத்த பன்றி மற்றும் நண்டு உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளுடன் புத்தாண்டைக் கொண்டாடினர்.
கிரிபார்ட்டி தான் புத்தாண்டை முதலில் வரவேற்றுள்ளது. இந்திய நேரப்படி பிறப்கல் 3.30 மணிக்கு கிரிபார்ட்டி பிறந்த நாளை வரவேற்றுள்ளது. அதேநேரம் எப்போதும் புத்தாண்டை முதலில் வரவேற்கும் நாடாக கிரிபார்ட்டி இருந்தது இல்லை. கிரிபார்ட்டி லைன் தீவுகளுக்கான நேர மண்டல மாற்றம் டிசம்பர் 31, 1994இல் நடைமுறைக்கு வந்தது.
ஏன் இப்படி: உலகெங்கும் நேரம் என்பது பல்வேறு டைம் ஜோன்கள் அடிப்படையில் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதாவது உலகின் பல நாடுகள் பல டைம் ஜோன்களாக பிரிக்கப்பட்டு இருக்கும். கிரீன்விச் என்பதை வைத்தே நேரம் கணக்கிடப்படும். உதாரணமாக கிரீன்விச் நேரத்துடன் +5.30 மணி நேரத்தை இணைத்தால் இந்திய உள்ளூர் நேரம் வரும். அப்படி இந்த கிரிபார்ட்டி லைன் தீவுகளுக்கு இருந்த டைம் ஜோன் தான் மாற்றப்பட்டது.
இதனால் சர்வதேச டேட் லைனை (International Date Line) 1,000 கிலோமீட்டர்கள் வரை நகர்த்தியது. அப்படிதான் கிரிபார்ட்டி உள்ளே வந்தது.
என்ன நடந்தது: இந்த கிரிபார்ட்டி லைன் தீவுகளின் சில பகுதிகள் சற்று கிழக்கே இருந்த போதிலும், மூன்று நேர மண்டலங்களைக் கொண்ட அனைத்து தீவுக்கூட்டங்களின் நேரமும் ஆசியப் பகுதிக்குள் கொண்டு வரப்பட்டது. ஒரே நாட்டில் இரு வேறு நாட்கள் இருக்க் கூடாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக அருகே இருக்கும் ஹொனலுலு தீவுகளில் அதேநேரம் இருந்தாலும் அது ஒரு நாள் பின்னால் இருக்கும்.
இதைத் தொடர்ந்து டோங்கோ, சமோவா தீவு நாடுகள் புத்தாண்டைக் கொண்டாடின. அதேபோல நியூசிலாந்து நாட்டிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. அடுத்து ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவை அடுத்தடுத்து வரவேற்கும். இந்த நாடுகள் சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் புத்தாண்டுகளை வரவேற்கும். அதன் பிறகே இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் புத்தாண்டைக் கொண்டாடும்.
பிறகு ஆப்பிரிக்க நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் சற்று நேர இடைவெளியில் புத்தாண்டை வரவேற்கும். அதன் பிறகு அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகள் புத்தாண்டை வரவேற்கும்.
கடைசியாகப் பசிபிக்கில் உள்ள பேக்கர் தீவுகள் புத்தாண்டை வரவேற்கும். இந்திய நேரப்படி நாளை மாலை 5.30 மணியளவில் புத்தாண்டு நிகழும். அதேநேரம் பேக்கர் தீவுகளில் மனிதர்கள் யாரும் வசிப்பது இல்லை. மனிதர்கள் வசிக்கும் தீவில் எது கடைசி என்றால் அது சிறிய தீவு நாடான அமெரிக்கன் சமோவா தான். அங்கே இந்திய நேரப்படி நாளை மாலை 4.30 மணிக்குப் புத்தாண்டு நிகழும்