ஹேப்பி பர்த்டே விஜய்..! குழந்தைகள் நடிகர் விஜய்-ஐ விரும்புவது ஏன்?

தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தை விஜய் ஒரே இரவில் கொண்டு வந்த சாதனை அல்ல. அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தன் மகனை ஒரு திரைப்பட நடிகனாக மாற்ற வேண்டும் என்று நினைத்து, அதன் முதல் முயற்சியாக 26 ஆண்டுகளுக்கு முன்பு 'நாளைய தீர்ப்பு' என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்தார். அதற்கு முன்பு நடிகர் விஜயகாந்த் படங்களில் சிறு வயது விஜயகாந்தாக, விஜய் நடித்திருந்தாலும் இந்த 'நாளைய தீர்ப்பு' மூலம் அனைவரும் அறிந்த நடிகரானார் விஜய்.
அவரின் ஆரம்பகட்டப் படங்கள் விஜய் ஒரு மாஸ் ஹீரோவாக உருவாகுவார் என்பதற்கு எந்த அடையாளமும் அற்று இருந்தன. ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த 'காதலுக்கு மரியாதை' விஜய் மீது ஒரு தனி மரியாதை உண்டாக்கியது உண்மை. அதில் அவர் ஒரு மென்மையான காதலனாக தோன்றி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
இயக்குநர் விக்ரமன் உருவாக்கத்தில் வெளிவந்த 'பூவே உனக்காக' திரைப்படம், 'இவர் நம்ம வீட்டு பிள்ளை' என்கிற உணர்வை உருவாக்கியது. ஆனால் விஜய் என்றால் மென்மையான காதல் படத்தில்தான் நடிப்பாரோ என்கிற எண்ணத்தை உடைத்தது இயக்குநர் தரணி இயக்கிய 'கில்லி' திரைப்படம். அந்தத் திரைப்படத்தில் ஒரு குறும்புக்கார அண்ணனாகவும், ஆக்ஷன் ஹீரோவாகவும் தனக்குள் இருந்த திறமையை முழுவதுமாக வெளிக்காட்டினார். இந்தத் திரைப்படம் தான் விஜய்யை அனைவருக்கும் பிடித்தமான ஹீரோவாக உருவாக்கியது.
குழந்தைகள் விரும்புவது ஏன்?
விஜய்க்கு இருக்கும் குழந்தை ரசிகர்கள் பட்டாளம் போல் வேறு எந்த நடிகருக்கும் இல்லை என்றுதான் சொலல் வேண்டும். அட்லி இயக்கிய படம் 'தெறி' படம் இன்றும் பல குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் 'ஆல் டைம் ஃபேவரைட்' படம். குழந்தைகளின் மனதுக்கு மிக நெருக்கமான நடிகராக விஜய் இருப்பதற்கு முதல் காரணம் அவரது படங்களில் அத்துமீறிய ஆபாசம் இருக்காது. அம்மா, அப்பாவுடன் உட்கர்ந்து பார்க்கக் கூடிய படமாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி பார்க்கிறார்கள். ஆக்ஷன் என்ற பெயரில் அதீத வன்முறை விஜய் படங்களில் இல்லாததும் ஒரு மிக முக்கிய காரணம்.
டான்ஸ் ஹீரோ
விஜய்யின் 'நீ எந்த ஊரு நான் எந்த ஊரு' பாடல் அப்பாடல் வெளியாகியபோது, பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. குறிப்பாக குழந்தைகளை அப்பாடல் வெகுவாகக் கவர்ந்தது. ஊரில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு மேடையிலும் சிறுவர்கள் இப்பாடலுக்கு விஜய்யை போலவே ஆடையுடுத்தி, நெற்றியில் திருநீறு பட்டை அடித்து குதூகலமாக ஆடினார்கள். விஜய் என்றால் டான்ஸ்; டான்ஸ் என்றால் விஜய்- இதுதான் சிறுவர்களும் குழந்தைகளும் விஜய்யை ரசிக்க, கொண்டாட முதன்மை காரணம். அதனால் தான் அவருடைய ஒவ்வொரு படங்களிலும் ஒரு துள்ளல் இசை பாடல் கட்டாயம் இடம் பெறுகிறது.
சிம்புதேவன் இயக்கத்தில் வெளிவந்த 'புலி' படம் குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்தது. அந்தப் படத்தை குழந்தைகளுக்கான படம் என்கிற அடிப்படையில் எடுத்திருந்தாலோ, அந்த நோக்கத்தை முன்வைத்து ஆரம்பத்தில் இருந்தே விளம்பரப்படுத்தி இருந்தாலோ, அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
கத்தி போன்ற உடல்
விஜய் ஒரு பேட்டியில் 'உடலை கத்தி போன்று வைத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் எப்படி வேண்டுமானாலும் வீசலாம்' என்று கூறியிருப்பார். முதல் படத்தில் அறிமுகமானபோது இருந்த உடல்வாகை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அப்படியே வைத்திருக்கிறார். அந்த உடலில் வெளிப்படுத்தும் நக்கல், நையாண்டி, காமெடி, ஆக்ஷன், நடனம் அனைத்தும் அனைவரும் விரும்பும் விதமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் விஜய் நடிக்கிறார். அதனால்தான் 'இளைய தளபதி' என்கிற பட்டம் அவருக்குப் பொருத்தமாக இருக்கிறது.
மிகக் குறிப்பாக, தான் நடிக்கும் எல்லா படங்களிலும் ஒரு பக்கத்து வீட்டுக்காரர் உணர்வை கொடுப்பதும் குழந்தைகள் அவரை கொண்டாட காரணம். தன் மாமா, சித்தப்பா, பெரியப்பாவைப் போல் விஜய்யும் இயல்பான மனிதராக திரையில் இருப்பதுதான் குழந்தைகள் அவரை கொண்டாடவும் விரும்பவும் ரசிக்கவும் காரணமாக இருக்கிறது.