1. Home
  2. தமிழ்நாடு

ஹேப்பி பர்த்டே காஜல் : மாறாத இளமையும் மறுக்க முடியாத திறமையும்!

1

மும்பையில் பிறந்தவரான காஜல், விவேக் ஓபராய்-ஐஸ்வர்யா ராய் நடிப்பில் 2004-ல் வெளியான 'க்யூன் ஹோ கயா நா' என்னும் இந்திப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதுவே அவருடைய முதல் படம். அதன் பிறகு இயக்குநர் இமயம் பாரதிராஜா தமிழ், இந்தி என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் இயக்கத் திட்டமிட்ட 'பொம்மலாட்டம்' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்தப் படம் நீண்ட காலம் தயாரிப்பில் இருந்தது. அதற்கு முன்பாக தேஜா இயக்கத்தில் 2007இல் வெளியான 'லட்சுமி கல்யாணம்' காஜலை தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டது. 2008இல் 'பொம்மலாட்டம்' படம் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. அந்தப் படத்தில் அவர அர்ஜுனின் காதலியாக நானா படேகரின் உதவியாளராக நடித்திருந்தார். அதே ஆண்டு வெளியான வெங்கட் பிரபுவின் 'சரோஜா' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிரம்மாண்ட படங்களுக்குப் பெயர்போன இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'மகதீரா' என்னும் தெலுங்கு வரலாற்றுப் புனைவுப் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் காஜல். 2009-ல் வெளியான இந்தப் படம் தெலுங்கில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் தமிழ் டப்பிங் வடிவமான 'மாவீரன்' படமும் தமிழகத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் பெற்றார் காஜல்.

அதற்கு அடுத்த ஆண்டு சுசீந்திரன் இயக்கிய 'நான் மகான் அல்ல' படத்தில் கார்த்தியுடன் நாயகியாக நடித்திருந்தார். ஆக்‌ஷன். காமடி. சென்டிமென்ட், காதல் என அனைத்து ஜனரஞ்சக அம்சங்களும் சிறப்பாக அமைந்திருந்த அந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றதோடு விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. கார்த்தி-காஜல் இடையிலான காதல் காட்சிகள் படத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக அமைந்தது. ஒவ்வொரு காட்சியும் புத்துணர்வுடனும் இளமைத் துள்ளலுடனும் அனைத்து வயதினரும் ரசிக்கத்தக்க வகையிலும் அமைந்தது. காஜல் அழகாக இருந்ததோடு நடித்திருந்த விதமும் அனைவரையும் கவர்ந்தது. 'நான் மகான் அல்ல' படத்தின் மூலம் காஜல் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றார் என்று சொல்லலாம்.அடுத்ததாக 'துப்பாக்கி' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் காஜல். 

இந்தப் படத்தின் மூலம் காஜலின் வணிக மதிப்பும் பன்மடங்கு உயர்ந்தது. அடுத்ததாக கார்த்தியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த 'அழகுராஜா' படம் படுதோல்வி அடைந்தது. ஆனால் அந்தப் படத்தில் காதல் மட்டுமல்லாமல் நகைச்சுவைக் காட்சிகளிலும் கலக்கியிருப்பார்.

இதே காலகட்டத்தில் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் 'பிசினஸ்மேன்', ஜூனியர் என்.டி.ஆர் உடன் 'பிருந்தாவனம்' என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்திருந்தார் காஜல். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் 'மாற்றான்' படத்தில் நடித்திருந்தார். 'ஜில்லா' படத்தில் விஜய்யுடன் மீண்டும் ஜோடிசேர்ந்தார். தனுஷுடன் 'மாரி', விஷாலுடன் 'பாயும் புலி', அஜித்துடன் 'விவேகம்', விஜய்யுடன் மூன்றாம் முறையாக 'மெர்சல்' என தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் நடித்துவிட்டார். தெலுங்கிலும் மகேஷ் பாபு, ஜூனியர் எண்.டி.ஆர், ராம்சரண் தேஜா, ரவிதேஜா என முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்துவருகிறார்.

 'கோமாளி' படத்தின் பிரம்மாண்ட வெற்றி காஜலின் திரைவாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தில் ஜெயம் ரவியுடன் முதல் முறையாக நடித்த காஜல் அழகு, கிளாமர், பாடல்களின் சிறப்பான நடனம், நாயகனுடன் நல்ல கெமிஸ்ட்ரி என வெகுஜனப் படங்களில் கதாநாயகியிடம் எதிர்பார்க்கப்படும் அனைத்து விஷயங்களிலும் ரசிக்கவைத்தார்.

அழகு, நவீன உடைகளுக்கும் கிளாமர் காட்சிகளுக்கும் பொருந்தும் உடல்வாகு ஆகியவற்றைப் பெற்றிருக்கும் காஜல் அவற்றை இப்போதுவரை எந்த மாற்றமும் இல்லாமல் தக்கவைத்திருக்கிறார். 

தற்போது பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் 'இந்தியன் 2'வில் நடிப்பு மேதை கமல்ஹாசனுடன் முதல் முறையாக நடித்துவருகிறார் காஜல். இந்தப் படம் வெளியான பிறகு அவருடைய திரை வாழ்வில் இன்னும் பல உயரங்களை எட்டிப் பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கலாம்,

Trending News

Latest News

You May Like