1. Home
  2. தமிழ்நாடு

’ஹமாரே பாரா’ திரைப்படத்துக்கு கர்நாடகத்தில் அதிரடி தடை!

1

கமல் சந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹமாரே பாரா’. இந்தப் படத்தின் டீசரை கடந்த சில நாட்களுக்கு முன்பு படக்குழுவினர் வெளியிட்டனர். சமூகத்தில் பெண்கள் சாதி, மதத்தால் எப்படி எல்லாம் துன்பப்படுகிறார்கள், அவர்கள் முன்னேற்றம் எப்படி தடை படுகிறது என்பதை விளக்கும் வகையில் பல காட்சிகளை வைத்திருந்தார்கள்.இந்த காட்சிகள் சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில், படக்குழுவினருக்கு கொலை மிரட்டலும் வந்தது.

இதனையடுத்து முன்னதாக மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த திரைப்படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. ஒரு முஸ்லிம் உறுப்பினர் உட்பட மூன்று பேர் அடங்கிய குழுவை நியமித்ததோடு, திரைப்படத்தை பார்த்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் முடிவில் படத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், படத்தில் இடம்பெற்றிருந்த 2 சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கியதும் திரைப்படத்தை வெளியிடலாம் என அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் ஜூன் 14 வரை தள்ளிப்போடப்பட்டிருந்த இந்த திரைப்படம், முன்னதாக திட்டமிட்டபடி இன்றே திரையரங்குகளில் வெளியாகிறது.

முன்னதாக 'ஹம் தோ ஹமாரே பராஹ்' என்று பெயரிடப்பட்ட இந்த திரைப்படம், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் உத்தரவின்படி, 'ஹமாரே பராஹ்' என மறுபெயரிடப்பட்டது. இந்த திரைப்படம் இன்று வெளியாகவிருந்த சூழலில் கர்நாடகத்தில் படத்தை வெளியிட்டால் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கும் என பல சிறுபான்மை அமைப்புகள் மற்றும் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை ஏற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 'ஹமாரே பாரா' திரைப்படத்தை இரண்டு வாரங்களுக்கு அல்லது மறு அறிவிப்பு வரும் வரை வெளியிடவோ அல்லது ஒளிபரப்பவோ கூடாது என கர்நாடக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.படத்தின் டிரெய்லரைப் பார்த்த பிறகு அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், கர்நாடக திரைப்பட ஒழுங்குமுறை சட்டம் 1964, பிரிவுகள் 15(1) மற்றும் 15(5) ஆகியவற்றின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசின் உத்தரவை மீறி யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை இயக்குநர் அலோக் மோகன் எச்சரித்துள்ளார். 


 

Trending News

Latest News

You May Like